வளைகுடா நாடுகளின் பிம்ஸ்டெக் அமைப்பின் தலைவராக மைத்திரி


வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியமான பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் ஐந்தாவது அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைப் பதவி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பின் நான்காவது அரச தலைவர்கள் மாநாடு நேற்று நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் ஆரம்பமானதுடன், இன்று (31) இடம்பெற்ற இறுதி நிகழ்வின்போது அதன் தலைமைப் பதவி இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

 அந்த வகையில் ஐந்தாவது பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறும்.

பிம்ஸ்டெக் அமைப்பு பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 07 தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைக்கொண்ட வலயமைப்பாகும்.

 இதன் முக்கிய நோக்கம் வங்காள விரிகுடாவை அண்மித்த தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையில் தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதாகும். வர்த்தக முதலீடு, தொழில்நுட்பம், சுற்றுலா, மனித வள அபிவிருத்தி, விவசாயம், மீன்பிடி, போக்குவரத்து, தொடர்பாடல் ஆகிய துறைகளும் இதில் உள்ளடங்குகின்றன.

 கல்வி, தொழிற்துறை, தொழில்நுட்பத் துறைக்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வசதிகளை வழங்குவது இதன் நோக்கமாகும். பொருளாதார, சமூக, தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான துறைகளுக்கான செயற்திறமான பங்கேற்பும் பரஸ்பர ஒத்துழைப்பும் இதன் மூலம் ஏற்படுத்தப்படுகின்றது.

 புதிய தலைமைப் பதவியை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து விசேட பிரகடனமொன்றைச் செய்த ஜனாதிபதி, பிம்ஸ்டெக் அமைப்பின் நான்காவது அரச தலைவர்கள் மாநாட்டை மிகவும் வெற்றிகரமாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமை தொடர்பாகவும் நேபாளத்திற்கு வருதைதந்த சந்தர்ப்பம் முதல் வழங்கிய மகத்தான வரவேற்பு மற்றும் உபசரிப்பு தொடர்பில் நேபாள அரசாங்கத்திற்கு தனது நன்றியை தெரிவித்தார்.

No comments