தமிழ் மொழிக்கு முதன்மை - வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்


வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட இடங்களில் தமிழ் மொழிக்கு முதன்மை வழங்கப்பட வேண்டும் என வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் அமர்வு கடந்த 17 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றபோது, உறுப்பினர் ந.பொன்ராசா கொண்டுவந்த மேற்படி பிரேரணை அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர் பொன்ராசா பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போது தமிழினத்தின் இருப்பை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழ் மொழிக்கான முதன்மை நிலை திட்டமிட்டு இல்லாமல் செய்யப்பட்டு வருகின்றது எனக் குற்றம்சாட்டினார்.

தமிழ் எமது மொழி சைவம் எமது வழி என வாழ்ந்த தமிழர் பரம்பரை இன்று இந்த இரண்டையும் இழக்கும் நிலைக்குச் சென்றுகொண்டிருப்பது வேதனையானது எனவும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழ் மொழிக்கு இருந்துவந்த முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

உலகில் உள்ள மொழிகள் அனைத்திலும் முதன் மொழியாகவும் தொன்மை மொழியாகவும் விளங்குகின்ற தமிழ் மொழி தமிழர்களின் தாய் மொழியாகும். எமது உயிரினும் மேலான தமிழ் மொழிக்கு எமது தாயகப் பிரதேசத்தில் முக்கியத்துவம் வழங்கப்படுவது அண்மைக் காலமாகக் குறைந்து வருகின்றது.

மாற்று இனத்தவர்கள் ஒருபுறம் எமது மொழியை மறுதலிக்கின்ற அதேவேளை, தமிழ் மக்களே தமது மொழியில் பற்றுக் குறைந்தவர்களாக மாறிவருகின்றனர். தெரிந்தோ தெரியாமலோ இடம்பெற்றுவரும் இவ்வாறான சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி எமது தாய்மொழியைப் பாதுகாக்கவேண்டிய தேவை எம் அனைவருக்கும் உண்டு.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மொழிக்கு அதி முக்கியத்துவம் வழங்கப்பட்டது. எனினும், 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த நிலை சடுதியாக மாற்றம் பெற்றிருக்கின்றது. எங்கு பார்க்கினும் ஆங்கில மொழியின் ஆதிக்கம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. பெரும்பாலான அலுவலகங்களில் அதிகாரிகளின் பதவிப் பெயர்கள், அவர்களின் அலுவலகங்கள் போன்றன ஆங்கில மொழியிலேயே அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன.

வர்த்தக நிலையங்களில் ஆங்கிலப் பெயர்களுடன் விளம்பரப் பலகைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. போக்குவரத்து பேருந்துகளில் கூட ஆங்கிலத்திற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலை தொடருமாயின் எமது உயிரினும் மேலான தமிழ் மொழி எதிர்காலத்தில் வழக்கொழிந்துவிடும். தமிழ் எமது மொழி சைவம் எமது வழி என வாழ்ந்த தமிழர் பரம்பரை இன்று இந்த இரண்டையும் இழக்கும் நிலைக்குச் சென்றுகொண்டிருப்பது வேதனையானது. கல்வியும் மொழியும் பண்பாடும் நிலமும் தமிழ் இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்களாக இருக்கின்றன. தமிழினத்தின் இந்த அடையாளங்களை இல்லாதொழிக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

பாடப் புத்தகங்களில் தமிழர்களின் வரலாறு திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றது. தமிழர் தாயகத்தில் தமிழ் மொழி இரண்டாம் தர மொழியாகப் பார்க்கப்படுகின்றது. தமிழ்ப் பண்பாடு சீரழிக்கப்படுகின்றது. எமது நிலத்தில் திட்டமிட்ட ரீதியில் குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நிலையில், நாம் அமைதியாக இருந்தால் தமிழ் இனம் எதிர்காலத்தில் தனது இருப்பை நிலைநாட்டுவதற்கு பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்ளவேண்டி ஏற்படும். எனவே, எமது இனத்துவ அடையாளங்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

தமிழர் தாயகத்தில், வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் தமிழ் மொழிக்கு முதன்மை நிலை வழங்கப்படவேண்டும். இங்குள்ள வர்த்தக நிலையங்கள், பொது நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள், விளம்பரப் பலகைகள் அனைத்தும் தமிழ் மொழிக்கு மாற்றப்பட வேண்டும். இது தொடர்பாக வியாபார நிறுவனங்கள், வர்த்த நிலைய உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கவேண்டும். தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்காக இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த வேண்டும். – என்றார்.

No comments