திலீபனை மறக்கடிக்க முல்லை வருகின்றார் காந்தி?

தியாகி திலீபன் நினைவேந்தல் காலத்தில் எல்லாம் மகாத்மா காந்தியை தூக்கிபிடிக்கும் இந்திய துணைதூதரகம் இம்முறை முல்லைதீவில் கடைவிரித்துள்ளது.யாழ்ப்பாணத்தி;ல் கடந்த ஆண்டுகளில் இரா.சம்பந்தனை கூட்டிவந்து ஈழத்து காந்தியென இந்திய துணைதூதரகம் குத்திமுறிந்த போதும் அது வெற்றிபெற்றிருக்கவில்லை.

இந்நிலையில் இந்திய அரசின் சதிமுயற்சிக்கு முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை துணை போகின்றதா என கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள்  கேள்வி எழுப்பியுள்ளார்கள். 

நேற்று சனிக்கிழமை கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்கள் சி.லோகேஸ்வரன் மற்றும் த.அமலன் ஆகியோர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் முல்லைத்தீவு மாவட்டம் தமிழர்களின் வரலாற்று தொன்மையான மாவட்டம் அதில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினத்தை ஒக்டோபர் 2ம் திகதியன்று இந்திய தூதரகத்தின் உதவியுடன் முல்லைத்தீவில் பாரியளவில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்தறிய கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆறாவது கூட்டத்தொடரில் இந்திய தூதரக பிரதிநிதிகளின் முன்னிலையில் கேட்டறியப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தினை முல்லைத்தீவு  நகர்பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவு தூபியில் கொண்டாடுவதற்கு தவிசாளர் உள்ளிட்ட 21 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தமிழரசு கட்சி உறுப்பினர் சி.லோகேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர் த.அமலன் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்கள். 

குறித்த நிகழ்வு கொண்டாடுவதற்கு பிரதேச சபை முன்வந்துள்ள நிலையில் இரண்டு உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு தங்கள் கருத்தினை வெளியிட்டுள்ளார்கள்.

இந்திய திணிப்பினை முல்லைத்தீவில் மேற்கொள்வதாற்கான முன்னாயத்தை இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளது. முல்லைத்தீவு நகரில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலை பிரதேச சபையின் அனுமதி இன்றியே அமைக்கப்பட்டுள்ளது. இந்த மகாத்மா காந்தி சிலையில் விழா எடுப்பது என்பது முல்லைத்தீவு மண்ணில் நிகழ்ந்த தியாகங்களையும் மண்ணுக்காக போராடி உயிர்நீர்த்தவர்களின் அர்ப்பணிப்புக்களையும் கொச்சைபடுத்தும் செயலாக நாங்கள் இதனை பாக்கின்றோம் என்றும் தெரிவித்தனர்.

திட்டமிட்டவகையில் முல்லைத்தீவில் குறித்த காந்திசிலை கடந்தவருடமே அமைக்கபட்டதோடு இதுவரைகாலமும் முல்லைத்தீவில் காந்திக்கு விழாவும் எடுக்கப்படவில்லை இருந்தபோதிலும் இந்த விழாவை இந்திய துணை தூதரகம் நடாத்துவதற்கு இந்த வருடம் முன்வந்துள்ளது. இது இந்திய திணிப்பை எம் மத்தியில் வலிந்து மேற்கொள்வதற்கான முயற்சியாகும் .இதற்க்கு நாம் துணைபோக முடியாது . 

மக்களின் வலிகளை அறிந்தவர்கள் நாங்கள் வாக்குறுதிகளை கொடுத்த மக்களுக்கு நேர்மையாக சேவை செய்யவேண்டிய பொறுப்பு எங்களிடம் உண்டு மக்களின் குரலாக நாங்கள் மக்கள் பிரதிநிதிகளாக மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நிகழ்வினை மேற்கொள்ளும் இந்திய தூதரகத்தின் சதி முயற்சிக்கு எதிர்ப்பினை வெளியிடுகின்றோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments