இந்தியா கைவிட்ட சம்பூர் மின் நிலைத்துள் நுளைந்தது சீனா !


சம்பூரில் இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்தியா கைவிட்டதை அடுத்து, சிறிலங்காவின் முதலாவது இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை சீனா அமைக்கவுள்ளது.

இந்த மின் நிலையம் அம்பாந்தோட்டையில் அமைக்கப்படும் என்றும், இதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை சிறிலங்கா, சீன அரசாங்கங்கள்,மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன இணைந்து கூட்டு முயற்சியாக அமைக்கவுள்ளன.

இதன் மூலம், 300 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான முத்தரப்பு புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதற்காக, சுமார் 400 மில்லியன் டொலர் அல்லது 64 பில்லியன் ரூபா செலவு ஏற்படும். எனினும்,  சாத்திய ஆய்வு முடிந்த பின்னரே, சரியான தொகை தெரியவரும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சம்பூரில் 500 மெகாவாட் திறன்கொண்ட அனல் மின் நிலையத்தை அமைக்க இந்தியா இணங்கியிருந்தது.

அதற்கு, திருகோணமலை மக்களிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து,  அங்கு இயற்கை திரவ வாயு மின் நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டது.

அதற்கு இந்திய இணங்கிய போதும், மின்சாரசபை பொறியாளர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில், திருகோணமலையில், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் உதவியுடன் இரண்டு இயற்கை திரவ வாயு மின் திட்டங்களை அமைக்கும் திட்டம் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பூர் இயற்கை திரவ வாயு மின் திட்டத்தை இந்தியா கைவிட்டது. அதையடுத்தே, அம்பாந்தோட்டையில் சீனாவின் உதவியுடன், முதலாவது இயற்கை திரவ வாயு மின் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

No comments