அரசியல் கைதிகளிற்காக மன்னாரில் போராட்டம்!


அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில்  மன்னார் மாவட்டச்  செயலகத்திற்கு முன்பாக அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம் பெற்றது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த அடையாள உண்ணாவிரத போராட்டமானது உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடன் நிறை வேற்றக் கோரியும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடன் நீக்கக்கோரியும் குறித்த அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம் பெற்றது.

அனுராதபுரம்  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன், கிளிநொச்சியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவைச் சேர்ந்த தங்கவேல் நிமலன் ஆகிய 10 கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  அரசியல் கைதிகள்  உள்ளிட்ட ஏனைய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின்  விடுதலையை வலியுறுத்தி  வடக்கு , கிழக்கில் தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  கைதிகளை தமிழ் அரசியல் தலைமைகள்  உள்ளிட்ட அரச, அரசசார்பற்ற  நிறுவனங்களும் நேரடியாக சென்று  பார்வையிட்டு வருகின்றனர். 
போராட்டத்தில் ஈடுபட்டுவரும்   அரசியல் கைதிகள்  உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் கைதிகளின்  விடுதலை தொடர்பான போராட்டங்களும் அழுத்தங்களும்   கடுமையாக பிரயோகிக்கப்பட்டுள்ள நிலையில்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற   உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர்   நேற்று நேரடியாக சந்தித்தனர். 


இந்த நிலையில்,   அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை  மற்றும் பயங்கரவாத  தடைச்சட்ட நீங்கப்பட வேண்டும் போன்ற  கோரிக்கைகளை முன்வைத்து  மன்னாரில்  இந்த போராட்டம்  மேற்கொள்ளப்பட்டது. 

போராட்டத்தில்   மன்னர் மாவட்ட பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள் ,சர்வமத தலைவர்கள், அரசியல்   கைதிகளின்  உறவினர்கள்,    மன்னார் நகரசபை தலைவர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments