உண்ணாவிரதி அனுராதபுரத்திலிருந்து மாற்றம்?


அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதத்தில் குதித்துள்ள தமிழ் அரசியல் கைதிகளுள் ஒருவர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இன்று அவசர அவசரமாக மாற்றப்பட்டுள்ளார்.சிவசுப்பிரமணியம் தில்லைராஜா எனும் அரசியல் கைதியே இவ்வாறு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீரிழிவு நோயாளியான இவர் மீது விமானமொன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த எட்டுவருடங்களிற்கு மேலாக அனுராதபுரம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய எட்டு அரசியல் கைதிகளுடன் தம்மீதான விசாரணைகளை துரிதப்படுத்தி விடுதலை செய்யுமாறு கோரி கடந்த வெள்ளிமுதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தினில் குதித்திருந்தார்.நீரிழிவு நோயாளியான அவரது உடல்நிலை மோசமடையத்தொடங்கியதையடுத்தே தற்போது அவர் அவசர அவசரமாக  வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே இன்று யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பயணித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அனுராதபுரம் சிறைக்கு விஜயம் செய்து போராட்டத்தில் குதித்துள்ள அரசியல் கைதிகளை சந்தித்து பேசியிருந்தார்.அவருடன் வடமாகாணசபை உறுப்பினர் கே.சயந்தனும் சமூகமளித்திருந்ததாக தெரியவருகின்றது.

அரசியல் கைதிகளது கோரிக்கைகள் தொடர்பில் நாளை அரசுடன் பேசுவதாக சுமந்திரன் தெரிவித்ததாக அரசியல் கைதிகளது குடும்பங்கள் தகவல் தெரிவித்தன.

No comments