அரசியல் கைதிகளிற்காக குரல் கொடுக்க அழைப்பு!


அரசியல் கைதிகளில் பலர் ஜந்தாவது தடைவையாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.அவர்களில் பலரது உடல்நிலை மோசமடைந்துவருகின்றது.முன்னரும் பல தடவைகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்திருந்தமையால் இந்த போராட்டத்தை தாங்க கூடிய உடல்நிலையில் அவர்கள் இல்லை.இதனை புரிந்து கொண்டு அவர்களது வழக்குகளை துரிதப்படுத்தியோ அல்லது குறைந்த கால புனாவாழ்வை வழங்கியோ விடுதலை செய்ய அனைவரும் உதவவேண்டுமென அரசியல் கைதிகளது குடும்பங்கள் கோரியுள்ளன.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை அவர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீரோடே தமது கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.
அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சுலக்சனின் சகோதரியான மோகனா மற்றும் வவுனியாவை சேர்ந்த அரசியல் கைதி ஜெயச்சந்திரனின் தாயார் மற்றும் விடுவிக்கப்பட்ட அரசியல் கைதி கோமகன் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கெடுத்திருந்தனர்.
இவர்களுள் வவுனியாவில் கைதான ஜெயச்சந்திரன் புனர்வாழ்வளிக்கப்பட்டு 2010ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டு ஜந்து மாதங்களின் பின்னர் கைதாகியுள்ளார்.கடந்த எட்டுவருடங்களாக அவர் சிறைகளில் மாறி மாறி அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.கைதான அன்று அவரிற்கு திருமணம் ஏற்பாடாகியிருந்தது.திருமணம் முடிக்கவிருந்த பெண் கடந்த எட்டுவருடங்களாக காத்திருப்பதாக பெரும் கதறலுடன் தாயார் தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் விவகாரத்தில் வெறும் உறுதி மொழி மட்டுமே வழங்குவதை விடுத்து அவர்களது போராட்டத்தை வலுப்படுத்த அனைவரையும் ஒன்று திரள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்.பல்கலைக்கழக சமூகம் கடந்த காலங்களில் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் செயற்பட்டதனை நினைவுகூர்ந்த அவர்கள் தற்போதைய சூழலில் தமது உறவுகளது விடுதலைக்கு அனைவரும் கட்சி அரசியலை கடந்து முன்வரவும் அரசியல் கைதிகளது குடும்பங்கள் கோரியுள்ளன.  

No comments