புளொட் துப்பாக்கி:ஆய்வுக்கு நீதிமன்று அனுமதி!

புளொட்டின் முன்னாள் உறுப்பினரொரின் வீட்டில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விவரங்களை அறிந்துகொள்வதற்காக, அவற்றை அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பக் கோரும் யாழ்ப்பாணப் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், நேற்று (25) அனுமதியளித்தார்.

கடந்த டிசெம்பர் 19ஆம் திகதி, புளொட்டின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேர்ந்த சிவகுமார் (வயது 56) என்பவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து, துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.

இதையடுத்து, குறித்த உறுப்பினர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, “சந்தேகநபரிடம் மீட்கப்பட்ட ஆயுதங்களில் ஏகே47 துப்பாக்கி ஒன்று, கைத்துப்பாக்கி ஒன்று, 2 வோக்கிடோக்கிகள் என, 4 பொருட்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். அவற்றைத் தயாரித்த நாடு எது, உற்பத்தி ஆண்டு எது உள்ளிட்ட தகவல்களை அறிவதன் ஊடாக, அவை எங்கிருந்து சந்தேகநபருக்குக் கிடைத்தன என்பதை ஆராய முடியும். எனவே, குறித்த நான்கு சான்றுப் பொருட்களையும், அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்ப மன்று அனுமதிக்க வேண்டும்” என்று, பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.
இதையடுத்து, பொலிஸாரின் மேற்குறித்த விண்ணப்பத்துக்கு அனுமதியளித்த மன்று, குறித்த நபரின் விளக்கமறியலை, 14 நாள்களுக்கு நீடித்து உத்தரவிட்டது.

No comments