நல்லூரானும் தங்க கூரையின் கீழ்!

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஷண்முகர் ஸ்வர்ண விமான ( தங்கவிமான அல்லது பொற்கூரை ) மஹா கும்பாபிஷேகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நல்லூர் ஆலய மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் கார்த்திகை நட்சத்திர நாளில் ஸ்வர்ண விமான கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

காலை 06 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஐந்து பிரதான கும்பங்களை சிவாச்சாரியர்கள் ஏந்தி உள்வீதி வலம் வந்து பொற்கூரை மீதுள்ள கலசங்களுக்கு பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானை சமேதரராய் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி உள் வீதியுலா வந்து , காலை 6.45 மணியளவில் வேத பாராயணம் ஓதி மங்கள இசை எழும்ப கலச அபிஷேகம் நடைபெற்றது.

இந்த மஹாகும்பாபிசேக கிரியைகளை நடாத்துவதற்கு, தென்னிந்தியாவில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலை சேர்ந்த ஸ்ரீ சிவ ஸ்ரீ ஐயப்ப சபேஸ தீக்ஷிதர் உள்ளிட்ட நான்கு பூஜ்ய ஸ்ரீ தீக்ஷிதர்களும் இன்னும் சில வேத பண்டிதர்களும் நல்லூருக்கு வருகை தந்திருந்தனர்.

தமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில், பழனி தண்டாயுதபாணிஸ்வாமி கோயில், திருப்பதி , ஸ்ரீ ரங்கநாதர் கோயில், காஞ்சி காமாக்ஷியம்மன் கோயில் போன்ற ஆலயங்களில் தங்க விமானங்கள் உள்ளன.

இன்றைய தினத்துடன் இலங்கையில் பொற்கூரை வேய்ந்த முதல் ஆலயம் நல்லூர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments