புறப்படுகின்றார் முதலமைச்சர்: உடமைகளை கையளிக்க தயாராம்?

வடமாகாண முதலமைச்சர் தனது வசமுள்ள அரச சொத்துக்களினை மீள ஒப்படைக்க தனது செயலாளரிடம் அனுமதி கோரியுள்ளார்.இதனையடுத்து முதலமைச்சரிடமுள்ள அரச சொத்துக்களை பொறுப்பேற்று மீண்டும் முதலமைச்சர் புதிய சபையின் கீழ் வருகின்ற போது கையளிக்க முதலமைச்சர் அமைச்சின் அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர்.
தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் பதவிக்காலம் ஒக்டோபர் 25ம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது.

தற்போது அவர் தமிழரசுக்கட்சி சார்பு வடமாகாணசபை உறுப்பினரும் முன்னாள் வணிகர் கழக தலைவருமான ஜெயசேகரத்தினது வீடொன்றை வாடகைக்கு பெற்று அதனை தனது வாசஸ்தலமாக பயன்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில் தனது பதவிக்காலம் முடிவுக்கு வருகின்ற போது குறித்த வீட்டிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ள அவர் தன் வசமுள்ள வடமாகாணசபை சொத்துக்களை மீள கையளிக்க தற்போது தயாராகியுள்ளார்.  

இதனையடுத்து முதலமைச்சரால் மீளளிக்கப்படும் அரச சொத்துக்களை பொறுப்பேற்று பாதுகாத்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

ஏற்கனவே பதவிகளில் இருக்கின்ற அரசியல் தலைவர்கள்.உயரதிகாரிகள் பதவியிழப்பு அல்லது இடமாற்றத்தின் போது உரியவகையினில் தம்மிடமுள்ள அரச சொத்துக்களை கையளிக்கா சென்றுவிடுகின்ற நிலையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் முன்னுதாரணம் அனைத்து தரப்பிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.

No comments