இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களில் திணறும் யாழ் மாநகரசபை


தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ்.மாநகர சபையின் ஆட்சியை கைப்பற்றி நடத்திய 5 மாத ஆட்சிக்காலத்தில் இலஞ்ச, ஊழல் மற்றும் நிர்வாக முறைகேடுகள் தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக முறையற்ற ஆளனி நியமனம், இலஞ்சம் பெற்றமை, சட்ட விரோத இறைச்சி விற்பனை, முறைபற்ற களஞ்சிய பதிவுகள் போன்றவை தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை மாநகரசபையில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் மாநகர சபையின் இலஞ்ச ஊழல் குழுவினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் சபைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இக் குழுவினாலேயே மேற்படி விடயங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள்
பகிரங்கமாக சபையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக நல்லூர் ஆலய திருவிழாக் காலங்களுக்காக சபை அனுமதியுடன் தற்காலிக தொழிலாளர்கள் 40 பேர் மாநகர சபையில் உள்ள தொழிலாளர் சங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களின் 12 பேர் சிறு தொகை பணத்தினை பெற்றுக் கொண்டே அச் சங்கத்தினால் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த 12 பேரிடமும் இருந்து சங்க உறுப்பினர்களால் இதுவரையில் பகுதி பகுதியாக 42 ஆயிரம் ரூபா பணம் நியமனம் பெற்றுக் கொடுத்தமைக்காக இலஞ்சமாக பெறப்பட்டுள்ளது.

இதனை அந்த 12 பேரும் மாநகர பிரதி மேஜர் ஈசன் முன்னிலையில் எழுத்து மூலமாக இலஞ்ச ஊழல் குழுவிடம் ஒப்புக் கொண்டு கையப்பமிட்டுள்ளனர் என்று இலஞ்சம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.  மேலும் நல்லூர் காலங்களில் பணிக்கு அமர்த்த சபையால் ஒப்புதல் வழங்கப்பட்ட பணியாளர்களின் தொகையினை தவிர மேலதிகமான பணியாளர்கள் மேயரின் சிபார்சில் ஆணையாளரால் சபையின் அனுமதியின்றி பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

அது போன்று கோம்பயர் மயானத்தில் மேயரின் ஒப்புதலில் ஆணையாளரினால் ஒருவர் தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். இருப்பினும் அவருக்கான ஒரு மாத கால அவகாசம் முடிந்த பின்னர் மேலதிகமாக ஒரு மாதம் மேயர், ஆணையாளரின் ஒப்புதல் இன்றி பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனார்.
இதற்கான நியமனக் கடிதம் மேயர், ஆணையாளரின் ஒப்புதல் இன்றி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நல்லூர் திருவிழாக்காலங்களில் பணியில் இருந்தவர்கள், அங்கும் கையெப்பம் இட்டுவிட்டு, யாழ்.நவீன சந்தைப் பகுதியிலும் தாம் பணியில் இருந்தாக கையெப்பமிட்டுள்ளனர்.

இதே போன்று மாநகர சபையின் களஞ்சியத்தில் உள்ள பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கண்டாவளை மண்ணின் அளவிற்கும் பார்க்க 12 கீயூப் மண் மேலதிகமாக காணப்படுகின்றது. அதே போன்று அங்குள்ள இருப்பு குழாய் (பொக்ஸ் பார்) களஞ்சிய இருப்பில் இருந்து 24 குறைந்துள்ளது என்று நிர்வாக முறைகேடுகள் தொடர்பிலும் இலஞ்ச ஊழல் குழுவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகுள் தொடர்பில் அந்தந்த பகுதிக்கு பொறுப்பானர்கள் உரிய பதிலினை தரவில்லை என்றும், தொழிலாளர் சங்கத்தினல் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் அவர்கள் மறுப்பு தொரிவித்து, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் இலஞ்ச ஊழல் குழு சபையில் பகிரங்கப்படுத்தியது.

இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த மேயர் இமானுவேல் ஆனோல்ட் இக் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குற்றங்கள் நிருபிக்கப்படும் பட்சத்தில் பாரபட்சம் இன்றி நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.

No comments