15 கோடி ரூபா தங்க கட்டிகளுடன் ஒருவர் கைது


சுமார் 15 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த தங்கக் கட்டிகளை கடத்தி வந்த இந்திய பிரஜையொருவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கருகே இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர் தர்மராஜ் கங்காதர்(47) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேற்படி இந்தியப் பிரஜை துபாயிலிருந்து இலங்கைக்கு 15 கோடி ரூபாவிலும் அதிக பெறுமதி வாய்ந்த தங்கக் கட்டிகளை தனது உடம்பில் கட்டி எடுத்து வந்தபோதே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயிலிருந்து இலங்கைக்கு பெருமளவு தங்கம் கடத்தப்படுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமையவே நேற்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் உஷார்நிலையிலிருந்த குற்றப் புலனாய்வு அதிகாரிகள் கிறீன் செனலுக்கூடாக வெளியே வந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் ஒவ்வொன்றும் ஒரு கிலோ கிராம் வீதம் 20 தங்கக் கட்டிகளை நெஞ்சு, வயிறு உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் கட்டி மறைத்து எடுத்து வந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments