2019 இல் சிறிலங்காவின் பாதுகாப்புச் செலவினம் 306.1 பில்லியன் ரூபா


2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்படவுள்ளதாக, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, 2019ஆம் ஆண்டில் பாதுகாப்புக்காக 306.1 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

2018 ஆம் ஆண்டில் பாதுகாப்புச் செலவினங்களுக்காக, 290 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் இது மேலும் அதிகரிக்கவுள்ளது.

சிறிலங்கா இராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோரக்காவல் படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு அமைச்சுக்கே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், விவசாய அமைச்சுக்கான ஒதுக்கீடு மூன்று மடங்கு அதிகரிக்கவுள்ளது. இந்த ஆண்டில், 23 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு இது 63 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படும்.

போக்குவரத்து, சிவில் விமான சேவை, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள்,  நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவம், பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரம்,  சிறிலங்கா அதிபர் செயலகம் உள்ளிட்டவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளும் அடுத்த ஆண்டில் அதிகரிக்கப்படவுள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான மொத்த அரசாங்க செலவினங்கள், 2,281.5  பில்லியன்  ரூபாவாக (ரூ. 2,281,682,472,000) ஆக இருக்கும் என்றும், மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சினால் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம், அடுத்தமாதம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

எதிர்வரும் நொவம்பர் 5ஆம் நாள், நாடாளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிப்பார்.

No comments