கொள்கையினை மறந்தமையாலேயே இளைஞர்கள் சீரழிகின்றனர்!

இன்று தமிழ் இளைஞர்களிடையே காணப்படுகின்ற குழப்பங்களுக்கு மூல காரணம் அவர்களிடையே சிறு பிராயந்தொடக்கம் ஒழுக்க உணர்வை வளர்க்காமையே என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்.

தாய் தந்தையரின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் பிள்ளைகள் வளராமை,பிள்ளைகளின் கைகளில் தேவைக்கதிகமாகப்பணப்புழக்கம் ஏற்படுவது போன்ற இன்னோரன்ன குறைபாடுகளே மாணவர்களை குழப்ப நிலைக்கு இட்டுச் செல்கின்றன.கல்வியின் பால்,ஒழுக்கத்தின்பால், முதியோர்களைக் கௌரவிக்கின்ற தன்மையின் பால் மனம் செல்லாது வன்முறைகளிலும் முதியோரை எதிர்கின்ற தன்மைகளிலும் அவர்களை ஈடுபட வைக்கின்றது. பல பிள்ளைகள் தீய வழியில் செல்வதற்கு அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களின் பெற்றோர்கள் காரணமாகின்றார்கள். “தம்பி இப்பொழுது எங்கே போகின்றாய்?” என்று பெற்றோர்கள் மகனிடம் கேட்பதில் தவறே இல்லை. “அது உங்களுக்குத் தேவையில்லாத விடயம்” என்று கூறி விட்டு விசை வண்டியில் விருட்டென்று செல்பவருக்கு வீட்டில் இரவு உணவு வைக்காது விடுதல் பிழையில்லை. இதன் காரணமாக “நான் தனித்து வாழப் போகின்றேன்” என்று சொல்லும் மகனுக்குத் “தாராளமாக” என்று கூறுவதில் பிழையில்லை, தவறில்லை. ஆனால் இவற்றை எல்லாம் விட ஆரம்பத்தில் இருந்தே குழந்தைப் பருவத்தில் உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி அவர்களின் அன்பையும் மதிப்பையும் பெறுவதே காலக்கிரமத்தில் நன்மை தரும். 

இளைஞர்கள் யுவதிகள் இந்த நாட்டின் சிறந்த பிரஜைகளாக எதிர்கால வழிகாட்டிகளாக கல்வியில் சிறந்தவர்களாகமற்றவர்கள் போற்றத்தக்க வகையில் உயர்தகைமையுடன் கூடிய ஒழுக்க சீலர்களாக வாழுவதற்கு ஏற்ற வகையில் அவர்கள் வழிகாட்டப்பட வேண்டும். இவ்வாறான வழிகாட்டல்கள் நகரப்புறங்களில் இருந்து ஆரம்பிப்பது கடினம். ஆனால் கிராமப் புறங்களில் இவற்றை நடைமுறைப்படுத்துவது சுலபம். ஒவ்வொரு கிராமங்களிலும் அப்பகுதிகளில் இருக்கும் இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற தமது உறவினர்களை,தமது நண்பர்களை,தமது அயலவர்களை முறையாக வழிநடாத்தி அவர்களுக்கு உரிய புத்திமதிகளைக்கூறி அவர்களை நேர் பாதையில் இட்டுச் செல்ல முடியும்.இவ்வாறான செயல்களால் கிராமங்கள் எழுச்சி பெறுவன.அப்போது நகரங்கள்தாமாகவே சீரிய நிலைக்குத் திரும்புவன. அறநெறி பாற்பட்ட இளைஞர், யுவதிகளால்த்தான் இன்றைய சூழல் திசைதிருப்பப்பட்டு எமது இளைய சமுதாயம் திருந்தி வாழ நடவடிக்கைகள் எடுக்க முடியும். தவறுகள் செய்த எமது இளைஞர் யுவதிகளை ஒதுக்கி வைக்கக் கூடாது. அவர்களுடன் பழகி அவர்களை நல் வழிப்படுத்த அவர்கள் நண்பர்களாலேயே முடியும். ஆகவே அறம் சார்ந்த எம் இளைஞர் யுவதிகளுக்குப் பாரிய கடமைகள் இருப்பதை இத்தருணத்தில் கூறி வைக்கின்றேன்.

இன்றைய இளைஞர்கள் தவறான வழிகளில் செல்கின்றார்கள் என்றால் அதற்கு அவர்கள் மட்டுமோ அல்லது அவர்கள் பெற்றோர்களோகாரணமென்றுதிடமாகக் கூறமுடியாது. மாறாக தமிழ் இளைஞர்கள் தமது கொள்கைகளை மறந்து படாடோபங்களிலும் போதைவஸ்துப் பாவனையிலும்திளைத்துவேறொரு உலகத்தில் சஞ்சரிப்பவர்களாக மாற வேண்டும்.தமது இனம் பற்றிய விழிப்புணர்வுகள் எதுவும் அற்றவர்களாக வாழ வேண்டும் என்றுதிட்டமிட்டு அவர்களுட் சிலரை சதிகாரக் கும்பல்கள்பிழையான வழிகளில் வழிநடாத்துகின்றார்கள் என்பதை எமது இளைய சமுதாயம் உணர வேண்டும். இவ்வாறான நோக்கம் படையினர் இடையே இருப்பதைச் சில படையினரே வெளிக் கொண்டு வந்துள்ளனர். ஆகவே சூழல் எமது இளைய சமுதாயத்தவர்களுக்கு எதிராகவே இருப்பதை நாம் உணர வேண்டும். 

இவற்றை உடனடியாகவே அவதானித்து கட்டுப்படுத்துவதற்கும் பிள்ளைகளை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கும் பெற்றோர்கள் பலர்தவறிவிடுகின்றார்கள். எனவேதான் இந்த பூதாகாரமான பிரச்சனைகளில் இருந்து எமது இளைஞர் யுவதிகள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் அது அவர்களின் நண்பர்களாலும் உறவினர்களாலும் ஏனைய இளைஞர்களாலுமே நிறைவேற்ற முடியும் என்று கூறுகின்றேன்.அதற்காக ஏனைய இளைஞர்கள் வன்முறைக் கலாச்சாரங்களில் ஈடுபட்டு அவர்களை அடக்குவதாக அது அர்த்தப்படாது. மாறாக தமது உற்ற நண்பர்களை, உறவினர்களை முறையாக வழிநடாத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர்கள் அன்புடன் மற்றையோரை வழிநடத்த முன் வரவேண்டுமெனவும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments