ஜெனீவா நோக்கி மூன்றாவது நாளாகத் தொடரும் ஈருளிப் பயணம்

தமிழின அழிப்புக்கு நீதியை கேட்டு பிரித்தானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் 3வது நாளாக இன்று திங்கட்கிழமை நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை வந்தடைந்தது. 

ஈருருளிப்பயணத்தை முன்னெடுக்கும் மனிதநேய பணியாளர்களை நெதர்லாந்து செயற்பாட்டாளர்கள் வரவேற்று தங்களது ஆதரவை வழங்கினார்கள். அத்துடன் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கான மனு காவல் உயர் அதிகாரிகளின் ஊடாக வழங்கப்பட்டது. 

நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சர் மனிதநேய பணியாளர்களை நேரடியாக சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லாத வேளையிலும் மின்னஞ்சல் ஊடாக இவ்வாறான மனித நேய பணிக்கு தனது வாழ்த்துக்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

ஐநா நோக்கிய தொடரும் பயணத்தில் இன்றைய தினம் மேலதிகமாக நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாட்டு தமிழ் இளையோர்களும் கலந்துகொண்டனர்.

இதேநேரம் இன்று திங்கட்கிழமை மறுமுனையில் பிரான்சு பாரிசிலிருந்து தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஈருருளிப் பயணப்போராட்டம் பாரிசின் புறநகர் பகுதியில் ஆர்ஜெந்தே மாநகரில் அமைக்கப்பட்ட தியாக தீபம் லெப்.கேணல். திலீபன் நினைவுக்கல் முன்பாக ஆரம்பித்துள்ளது.

மாவீர் குடும்பத்தை சேர்ந்த பிரான்சு த.ஒ.குழுப் பொறுப்பாளர் திரு. மகேஸ் ஏற்றி வைக்க ஆர்ஜெந்தே தமிழ்ச்சங்க தலைவர் மலர் வணக்கம் செய்து, அக வணக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஈருருளி பயணப்போராட்ட செயற்பாட்டாளர்கள் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தி, உறுதி மொழியுடன் நாடாளுமன்றம் நோக்கி பயணமானார்கள்.

மத்திய நேரம் பாரிசிலிருந்து ஈருருளி பயணம் இவிறி சூ சென் என்ற இடத்தை சென்றடைந்தது. அங்கு மாநகர முதல்வர் மற்றும் உதவி முதல்வர், ஏனைய பகுதிக்கு பொறுப்பானவர் மனிதநேய பணியாளர்களை அழைத்து ஆர்வத்துடன் வந்து பேசியதுடன் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

ஈருருளிப் பயணத்தின் போது வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
No comments