முதலமைச்சர் கதிரை வேண்டும்:மாவை விடாப்பிடி!

வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக எவ்வாறேனும் களமிறங்குவதென்பதில் மாவை சேனாதிராசா மும்முரமாக களமிறங்கியுள்ளார்.அதற்காக தமிழரசுக்கட்சியினுள்ளும் பங்காளி கட்சிகளிடையேயும் ஆதரவை திரட்டுவதில் அவர் முனைப்புக்காட்டிவருகின்றார்.

இதனிடையே முதலமைச்சர் வேட்பாளராக யாரைக் களமிறக்குவது என்று, உரிய நேரத்தில், முடிவெடுக்கப்படும் என்று, மாவை சேனாதிராசா தற்போது தெரிவித்துள்ளார்.

”வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம், முடிவடைவதற்கு இன்னும் காலம் இருக்கிறது. கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம்  முடிவடைந்து விட்டது. இரண்டு மாகாண சபைகளுக்குமான தேர்தல் எப்போது நடக்கும் என்பது தொடர்பாக இன்னும் உறுதியான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறான சூழலில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக, பலரும் பலவிதமான கருத்துக்களை கூறிவருகிறார்கள். கூட்டமைப்பின் கட்சிகளுக்குள் இருந்தும் அத்தகைய கருத்துக்கள் வெளிவருகின்றன.

வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படும்போது  முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் உரிய நேரத்தில், உரியவாறு ஒன்றுகூடி முடிவுகளை எடுப்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளால் எந்தக் குழப்பங்கள் வரமாட்டாது. எமது மக்களுக்கு செய்ய வேண்டியதை உரிய முறையில் செய்வோம். போலிக்குற்றச் சாட்டுக்களை மக்கள் முன் வைக்கமாட்டோம்” என்றும் மாவை  தெரிவித்துள்ளார்.

இதனிடையே கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ விடுதலைக்கழகம் என்பவை விக்கினேஸ்வரனிற்கு ஆதரவளித்து வெளியேற ஏற்கனவே திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments