ரணில், மைத்திரி, மகிந்த இணைந்தால்தான் தீர்வு கிடைக்குமாம் - மாவை


இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஒன்றிணைந்தே அரசியல் ரீதியில் தீர்வொன்றை காண வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய அரசாங்கம் அரசியல் தீர்வு வழங்குவதாக குறிப்பிட்டே ஆட்சிக்கு வந்தது. ஆகவே வழங்கிய வாக்குறுதியை ஒரு பொழுதும் மறக்க முடியாது. அரசாங்கம் அரசியல் தீர்வினை வழங்க முன்வந்தாலும் கடும்போக்காளர்களின் செயற்பாட்டின் காரணமாக அரசியல் தீர்வு ஒரு தொடர்கதையாகவே காணப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேன மஹிந்தவுடன் ஒன்றிணைந்தால் மாத்திரமே அரசியல் தீர்வு கிடைக்கப் பெறும் என்று குறிப்பட்டுள்ளமை நடைமுறைக்கு பொருத்தமற்றதாகவே காணப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேசிய அரசாங்கத்தை தோற்றுவிக்க முக்கிய இடம் வகித்தார் . தமிழ் மக்களும் அரசியல் தீர்வு கிடைக்கப் பெறும் என்ற காரணத்தினாலே தேசிய அரசாங்கத்தை தோற்றுவித்தனர்.

அரசியல் தீர்வு விடயத்தில் ஒருவரை பிறிதொருவர் கைக்காட்டி விட்டு விலகிவிட முடியாது. அனைவரும் ஒன்றினைந்தே புதிய அரசியலமைப்பினை உருவாக்க வேண்டும் என்றார்.

No comments