மைத்திரி காலில் வீழ்வோம்:கூட்டமைப்பு உறுதி?


வடகிழக்கிற்கான ஜனாதிபதி செயலணிக்கூட்டத்திற்கு செல்வதென கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.அரசியல் தீர்வு ஒருபுறம் மறுபுறம் அபிவிருத்தியென்ற கோசத்துடன் ஜனாதிபதி செயலணிக்கூட்டத்தில் பங்கெடுக்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்று எட்டப்படும் வரை வடக்கு கிழக்கு மாகாணத்தின் பொருளாதார முன்னேற்றம் பற்றிய ஜனாதிபதி செயலணியில் பங்குபற்றாது புறக்கணிக்க கூட்டமைப்பிற்கு வடக்கு முதலமைச்சர் அழைப்புவிடுத்துள்ள நிலையில் இது தொடர்பில் கட்சி தலைவர் இரா.சம்பந்தனிற்கு முதலமைச்சர் அனுப்பிய கடிதம் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே விவாதிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் இருந்து ஆளுநரைத் தவிர முதலமைச்சர்,வடமாகாண பிரதம செயலாளர் ஆகியோரே அழைக்கப்பட்டிருந்தனர்.மத்திய அமைச்சர்கள் சுமார் 12 பேரும் அவர்களுடைய செயலாளர்களும் இன்னும் சிலரும் படையினரில் உயரதிகாரிகளுந் தான் குறித்த செயலணியில் அங்கம் வகிக்கின்றார்கள். அவர்களுடைய பெயர்களே வர்த்தமானியிலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தம்மை இணைத்துக்கொள்ளாமை தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி முதல் பிரதமர் வரை காவடியெடுத்திருந்தனர்.

இதனையடுத்து அவர்கள் பார்வையாளர்களாக பங்கெடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

பொருளாதார ஊக்கிகளே அரசியல் தீர்விலும் பார்க்க தமிழர்களுக்கு இத்தருணத்தில் முக்கியத்துவம் அளிக்கக் கூடியவை என்று நீங்கள் நினைத்தால் குறித்த கூட்டத்தில் பங்கு பற்ற நீங்கள் முடிவெடுக்கலாமென முதலமைச்சர் தெரிவித்துள்ளமை தொடர்பில் இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு சுட்டிக்காட்டிய போதும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென தெரியவருகின்றது. 

அரசியல் தீர்வு முதலில் பொருளாதார முன்னேற்றம் அதன் பின்னர்” எனக் கூறுவதே உசிதம் என்ற கருத்தை கிடப்பில் கூட்டமைப்பு கைவிட்டுள்ள நிலையில் குறித்த செயலணியின் ஊடாக மாவை சேனாதிராசாவிற்கு மட்டும் 100 கோடி நிதி ஒதுக்கி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments