தமிழ்க் கூட்டமைப்பின் சாயம் வெளுக்கிறது !


தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் வட மாகாண நிலையம் கடந்த 30.07.2018 திங்கட்கிழமை கிளிநொச்சியில்  திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் திறப்பு விழாவில் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன் உட்படப் பலர் பங்கேற்றிருக்கின்றனர்.

தமித்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் வியாபாரியுமான சரவணபவன் நாடா வெட்டி அலுவலகத்தைத் திறந்து வைத்திருக்கிறார்.

இதுவரையிலும் அரசாங்கத்தை எதிர்த்தும் விமர்சித்தும் வந்த கூட்டமைப்பினர், விடுதலைப் புலிகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர் தாம் என்று கூறி, புலிகள் வலியுறுத்திய அரசியலுக்கு கிட்டவான தீர்வே தேவை என வலியுறுத்திக் கொண்டிருந்தவர்கள் இப்படிச் சடுதியாகச் சரணாகதி அடைந்திருக்கிறார்கள் என்றால் அது சாதாரணமானதல்ல.

தற்போதைய அரசாங்கத்தோடும் ஆட்சியோடும் இரகசியக் கூட்டையும் இரகசிய உடன்படிக்கைகள் பலதையும் கூட்டமைப்பு வைத்திருக்கிறது என்ற பொது அபிப்பிராயம் வலுவாகவே உள்ள பின்னணியில், இந்தச் சம்பவம் அந்தக் கருத்தை மெய்ப்பிக்கிறது.

“எதையும் மறைக்கலாம். உண்மையை மறைக்க முடியாது” என்று சொல்வார்கள். இது உண்மையே. எப்படித்தான் மறைத்தாலும் உண்மையின் ஒளி ஒரு நாள் வெளிப்பட்டே தீரும்.

பொதுவாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் பங்கு கலந்து கொள்கிற நிகழ்வுகளில் தமிழ்த்தலைவர்கள் பங்குபற்றி வருகிறார்கள். ஒரு நிகழ்வில் மட்டும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சற்று எதிர்ப்பாக நின்றார். மற்றும்படி எல்லோரும் ஒரே கோப்பையில் சாப்பிடத் தொடங்கி விட்டனர்.

ஆனால், அரசாங்கம் கூட்டமைப்பினரை திட்டமிட்டுத் தோற்கடித்து வருகிறது. ஏற்கனவே ஒப்புக் கொண்டவாறு இந்த அரசாங்கமும் அரசியல் தீர்வுக்கான – இனப்பிரச்சினைத்தீர்வுக்கான – அரசியலமைப்புத்திருத்தத்தை நேர்மையாகச் செய்யவில்லை. இப்பொழுது அதற்குச் சாட்டுப் போக்குகளைச் சொல்லி வருகிறது.

கூட்டமைப்புக் கோரியிருந்த கோரிக்கைகளில் ஒன்றைக் கூட அரசாங்கம் செயற்படுத்தியதாக இல்லை.

போதாக்குறைக்கு அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்க வேணும் என்று வலியுறுத்தியிருப்பதன் மூலமும் ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டின் மூலமும் சிங்களம் அல்லாத பிற சமூகங்களைப் பற்றிய புரிந்துணர்வுக்கு வெளியே தள்ளி விட்டிருக்கிறது.

இதைப் பற்றியெல்லாம் கூட்டமைப்பினருக்கு அக்கறையோ கவலையோ கிடையாது,

சனங்கள் வாக்களிக்கும் இயந்திரங்களாகக் கணிக்கப்படும் வரையில் இந்த மாதிரி அசட்டுத்தனங்களும் கோமாளி வேலைகளும் அரசியல் குத்துக் கரணங்களும் தவறுகளும் தாராளமாக நடக்கும் என்கிறார் மூத்த போராளி ஒருவர்.

அந்தப் போராளியின் கணிப்பில் தவறில்லை.

ஏனென்றால் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இவர்கள் பேசியவை இன்னும் காதில் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன. “அடைந்தால் மகா தேவி. இல்லையென்றால் மரண தேவி“ என்ற மாதிரி தமிழர்களுக்கு சுயாட்சிக்கு நிகரான தீர்வு வேணும். இல்லையென்றால் போராடி மடிவோம்” என்றனர்.


அடுத்து வரப்போகிற மாகாணசபைத் தேர்தலின் போதும் இதுதான் நடக்கப்போகிறது. அப்பொழுது பிரபாகரனையும் புலிகளையும் துணைக்கழைத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, சுயாட்சியைப் பற்றிப் பேசுவார்கள். தனிநாட்டைக் கனவு காண வைப்பார்கள்.

பிறகு, மெல்ல படியிறங்கிப்போய் அரசிடத்திலும் மனோ கணேசன் போன்றவர்களிடத்திலும் சரணாகதி ஆகி விடுவர்.

No comments