கீத் நொயாரை தெரியாதென்கிறார் மஹிந்த?

ஊடகவியலாளர் கீத் நொயாரை முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் கொலை செய்ய கடத்தியமை தொடர்பில் தனக்கு ஞாபகமில்லையென மஹிந்த ராஜபக்ஸதெரிவித்துள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று வாக்குமூலமொன்றை பதிவு செய்திருந்தனர்.சுமார் மூன்று மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டவேளை தனக்கு அது பற்றி ஞாபகமில்லையென அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் இது அரசியல் பழிவாங்கலெனவும் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் கடத்தப்பட்டிருந்தார்.அவர் கடத்தப்பட்டு கொல்லப்படவிருந்த நிலையில் தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மஹிந்தவுடன் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு கீத் நொயர் கடத்தப்பட்டமை பற்றி தெரிவித்துள்ளார்.இதனையடுத்து மஹிந்த கோத்தபாயவுடன் தொடர்புகொண்டு கீத் நொயரை விடுவிக்க ஏற்பாடு செய்திருந்தார்.


தற்போது அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் புகுந்துள்ள கீத் நொயார் அண்மையில் இலங்கை திரும்பி தான் கடத்தப்பட்டமை தொடர்பில் வாக்குமூலமளித்திருந்தாhத்.அதன் பின்னர் தொடர்விசாரணைக்கென குழுவொன்று அவுஸ்திரேலியா சென்று அவரது வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் மஹிந்தவிடம் வாக்குமூலம் பெறப்பட்டமைக்கு மினுவாங்கொட பிரதேச சபை தாமரை மொட்டு உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு மூன்றாண்டுகள் பூர்த்தியாகின்ற சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதியிடம் விசாரணை செய்வது அரசியல் தந்திரம் என்று அந்த உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மினுவாங்கொட பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் இன்று உடுகம்பொல பிரதேச சபை கேட்போர் கூடத்தில் பிரதேச சபைத் தவிசாளரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பிரதேச சபைத் தவிசாளர் உட்பட உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து கொண்டு இன்று சபைக்கு வருகை தந்துள்ளனர்.
அரசியல் பழிவாங்கல் தவிர ரணில் மைத்திரி அரசாங்கத்துக்குச் செய்வதற்கு வேறொன்றுமில்லை என்று மினுவாங்கொட பிரதேச சபை தவிசாளர் இதன்போது தெரிவித்தார்.

No comments