சொந்த மண் திரும்ப தமிழ் மக்களிற்கு தடை?


வவுனியா வடக்கின் எல்லைக்கிராமங்களாகிய காஞ்சூர மோட்டை ,காட்டுப்பூவரசங்குளம் மற்றும் நாவலர் பாம் ஆகிய தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்களில் அம்மக்கள் குடியேறுவதற்கு சிங்கள வன இலாகா அதிகாரிகளும் இராணுவப்புலனாய்வாளர்களும் தொடர்ச்சியாக தடையேற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இப்பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்ட சில குடும்பங்கள் தமது நிலங்களில் குடியேறியுள்ளபோதும் பல குடும்பங்கள் தமது நிலத்தில் மீளக்குடியேற ஆர்வம் கொண்டுள்ள போதும் அவர்கள் கடும் சிரமத்தினை தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகின்றார்கள். நேற்று வியாழக்கிழமை காலை தமது நிலங்களைத்துப்பரவு செய்வதற்கு சென்ற சில தமிழ் குடும்பங்களை இது உங்களுடைய காணி இல்லை என்று வன இலாகா அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் தகவலறிந்து செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர் ஒருவர் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.மக்கள் எதிர்கொண்டுள்ள  பிரச்சினைகளை பதிவு செய்து கொண்டிருந்த போது, வன இலாகா அதிகாரிகளினால் இராணுவப்புலனாய்வாளர்கள் அழைக்கப்பட்டதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவப்புலனாய்வாளர்கள் ஒளிப்படங்களையும் ஒளிப்பதிவுகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

தமது பூர்வீக நிலங்களில் தமிழ் மக்கள் குடியேற முடியாமல் தொடர்ச்சியாக நிர்க்கதி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள அதேவேளை சிங்கள குடும்பங்களை குடியமர்த்த அரசு மும்முரமாக நடவடிக்கைகள் எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

No comments