இரவு விருந்து:மைத்திரிக்கெதிரான போராட்டம் கைவிடப்பட்டது?


வடமராட்சி கிழக்கு கடலில் தொடரும் சட்டவிரோத கடலட்டை பிடிப்பு தொடர்பில் இலங்கை ஜனாதிபதியின் வருகையின் போது இன்று நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.நேற்றிரவு இலங்கை மீன்பிடி அமைச்சருக்கு யாழ்.மாவட்ட மீனவ சம்மேளனம் வழங்கிய இரவு விருந்தினையடுத்து கடலட்டை பிடிக்க வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்ய அமைச்சர் உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து போராட்டத்தை கைவிட கடற்றொழில் சம்மேளன தலைவர் வே.தவச்செல்வம் கோரியதாக வடமராட்சி கிழக்கு மீனவ அமைப்புக்கள் தெரிவித்தன.உடனடியாக கடலட்டை பிடிக்க வழங்கப்பட்;ட அனுமதிகளை இரத்து செய்ய கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் தடையினை தாண்டி கடலட்டை பிடிப்பில் ஈடுபடுபவர்களை காவல்துறை மூலம் கைது செய்ய அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் கடற்றொழில் சம்மேளன தலைவர் வே.தவச்செல்வம் தெரிவித்ததாகவும்  வடமராட்சி கிழக்கு மீனவ அமைப்புக்கள் தெரிவித்தன.அத்துடன் ஜனாதிபதிக்கெதிராக போராடினால் மயிலிட்டி துறைமுக திட்டத்தை கூட கைவிடவேண்டியிருக்குமெனவும் எச்சரித்திருந்ததாகவும் அத்தரப்புக்கள் மேலும் தெரிவித்தன.

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய கடலட்டை பிடிப்பால் கரைவலை மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பெரிதும் பாதிப்படைவதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.அத்துடன் முல்லைத்தீவு கடற்பரப்பில் கடல் அட்டை பிடிப்பதற்குரிய அனுமதியுடன் வந்த தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட எல்லையை மீறி வடமராட்சி கிழக்கு கடற்பரப்பிற்குள் நுழைந்து கடல் அட்டை பிடிப்பில் ஈடுபட்டு வருதாக அங்குள்ள மீனவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இதனை கண்டித்து இன்று மயிலிட்டியில் துறைமுக அடிக்கல் நாட்டும் விழாவிற்கு வருகை தரவிருந்த இலங்கை ஜனாதிபதிக்கு எதிர்ப்பினை வெளியிடவுள்ளதாக அறிவித்திருந்த நிலையிலேயே நேற்றிரவு யாழ்.நகரிலுள்ள விடுதியொன்றில் விருந்தளித்து பேச்சுக்களில் மீனவ சம்மேளனம் ஈடுபட்டது.

இதனிடையே சட்டவிரோத கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் தரப்புக்களிடம் கையூட்டினை பெற்றுக்கொண்டு அவர்களை காப்பாற்ற சம்மேளனம் முறபட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு மீனவ அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களினை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

No comments