யுத்தப்பரிசுகளில் மன உளநலப்பாதிப்பு முக்கியமானது:முதலமைச்சர்!
தமிழ் மக்களை உளநலப் பாதிப்புக்களிலிருந்து மீட்டெடுத்து சுகதேகிகளாக அவர்களை மாற்ற தமிழ் தெரிந்த உளநல ஆலோசனையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்தும் அவை வெற்றி பெறவில்லை. உளநலப் பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்பில் விரைந்து பல கடமைகளை நாம் ஆற்ற வேண்டியிருக்கின்றது என்பதை உணர்ந்துகொண்டுள்ளேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முதலமைச்சர் மேலும் இது பற்றி கருத்து வெளியிடுகையில் இயல்பாகவே இவ்வாறான பாதிக்கப்பட்டவர்கள் மனதில் சிலவெறுப்புக்களும், கோபதாபங்களும், காழ்ப்புணர்ச்சிகளும் குடிகொண்டிருப்பதை அவதானிக்கலாம். அவற்றில் இருந்து அவர்களை விடுவித்து சமுதாய நீரோட்டத்தில் சாதாரணமான மக்களைப் போல நடமாட நாம் உதவி புரியவேண்டும். உளநலச் சிகிச்சை என்பது காய்ச்சல் தலையிடிக்கு மருந்து கொடுப்பது போல ஒரேநாளில் சுகப்படுத்தக்கூடிய சிகிச்சை அல்ல. பாதிக்கப்பட்டவர்களுக்கான மனநலப் போதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவேண்டும். ஏனைய மக்களுடன் இவர்களை இணையச் செய்து தனிமையை நாடிசமூகத்தில் இருந்து விலகியிருக்கின்ற நிலையை இல்லாமல் செய்தல் வேண்டும்.
இந்நாட்டில் இடம்பெற்ற கடுமையான யுத்தத்தின் பயனாகத் தமது அங்கங்களை இழந்து உயிர்ப்புடன் வாழ்பவர்கள்,பிள்ளை குட்டிகளை இழந்தவர்கள்,தாய் தந்தையரை இழந்தவர்கள்,ஆதனங்கள்,வீடு மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தவர்கள். யுத்த அதிர்ச்சியின் காரணமாக உளநலக் குறைபாடுகளுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் எனப் பல்வேறு மக்கள் வெளிப்பார்வைக்கு சாதாரணமானவர்களாக காணப்படுகின்றபோதும் இவர்கள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களாக நித்திரையின்றி அமைதியற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் தமது குறைபாடுகளை வெளியே எடுத்துச்சொல்லமுடியாதவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். பல தரப்பட்டமக்கள் இவ்வாறான பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்டு தமது உள்ளக் குமுறல்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களை இனங்கண்டு மக்களுடன் கூடுதலாக உறவாடச் செய்து அவர்களின் தனிமை நிலையைப் போக்கி குழப்பநிலைகளிலிருந்து விடுபடச் செய்யவேண்டியது எமது தார்மீகப்பொறுப்பாகுமெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment