சம்பந்தனுடன் என்ன பேசினேன் - கோத்தா பதில்

அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர்பாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், பிரதானமாக கலந்துரையாடியதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இலக்குடன் காய்களை நடத்தி வரும் கோத்தாபய ராஜபக்ச, நேற்றுமுன்தினம் மாலை தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

சுமார் இரண்டு மணி நேரம் நடத்திய இந்தக் கலந்துரையாடலில், எதிர்கால அரசியல், பொருளாதார திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், தமது காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் முயற்சிகள் குறித்தும் தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களுக்கு எடுத்துக் கூறியிருந்தார்.இந்தச் சந்திப்புத் தொடர்பாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று, கோத்தாபய ராஜபக்சவிடம் கேள்விகளை எழுப்பியிருந்தது.

அண்மையில் சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது, மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து, இரா.சம்பந்தனுடன் நடத்திய கலந்துரையாடல் குறித்து கோத்தாபய ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஏதாவது குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக சம்பந்தனிடம் கதைத்தீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள கோத்தாபய ராஜபக்ச,

“தற்போது முன்னெடுக்கப்படும் அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் தொடர்பாக இரா.சம்பந்தனிடம், அவரது கருத்தை  கேட்டேன்.

அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு நாடாளுமன்றம் ஒருமனதாக இணங்கியுள்ளது. எனவே, அதனைச் செய்ய வேண்டியது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.

அத்துடன், அரசியலமைப்பு வரைவு விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சம்பந்தன் கூறினார்.” என்று தெரிவித்துள்ளார்.

No comments