மீனவர்களையும் நாடு கடத்த உத்தரவு?
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 7 தமிழக நாட்டுப் படகு மீனவர்களையும் நாடு கடத்த இலங்கை மல்லாகம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே கள்ளிவயல் தோட்டத்தைச் சார்ந்த செய்புல்லா, அப்துல் வஹாப் ஆகியோருக்குச் சொந்தமான நாட்டுப் படகுகளில் நாராயணன், சக்திதாசன், கண்ணதாசன், ஆயில்பதி, பிரவீன்குமார், பாலகிருஷ்ணன், மாதேஸ் ஆகிய 7 மீனவர்கள் கடந்த திங்கள்கிழமை இரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அந்தப் பகுதியில், ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இரண்டு நாட்டுப் படகுகளை கைப்பற்றி, அதில் இருந்த7 மீனவர்களையும் சிறைப் பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்த மொபைல் போன்கள் மற்றும் ஜிபிஎஸ் திசை காட்டும் கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.
.பின்னர் 7 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டும் வெளிநாட்டு படகுகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து யாழ்ப்பாணத்த்தில் உள்ள மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.மீனவர்களை விசாரித்த நீதிபதி அலெக்ஸ் ராஜா கிரேஷின், இலங்கை கடல் பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடித்தல் மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி மீன்பிடி முறையில் ஈடுபட்டது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் மீனவர்கள் மீது முன்வைக்கப்பட்டன.
இதன் மீது உத்தரவிட்ட நீதிபதி, "7 மீனவர்களுக்கும் இரண்டு குற்றங்களுக்கும் தனித்தனியே ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 7 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.இந்த மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் வந்து மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். 7 மீனவர்களையும் இந்தியாவுக்கு நாடு கடத்த (திருப்பி அனுப்ப) உத்தரவிடப்படுகிறது " இவ்வாறு தீர்ப்பளித்தார்.மேலும் படகின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் செப்டம்பர் 25-ம் திகதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
Post a Comment