ரணிலுக்கு முண்டுகொடுத்த சம்பந்தனின் கதிரை காலியாகிறதா ?



தம்மிடம் எதிர்க்கட்சிக்குரிய பெரும்பான்மை இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு தருமாறும் கூறிவந்த பொது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு கோரி சபாநாயகரிடம் எழுத்துமூல கடிதம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

16 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில்-மைத்திரி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற வகையில் முண்டுகொடுப்பதற்கு இணங்கியதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் செல்வம் அடைக்கலநாதனுக்கு குழுக்களின் பிரதித் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வசமுள்ள எதிர்க்கட்சி தலைவர் பதவியினை தமக்கு வழங்குமாறு ஒன்றிணைந்த எதிரணியினர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவருக்கான அதிகாரத்தை கோருவது தொடர்பில் எழுத்து மூலம் அறிவிக்குமாறு ஒன்றிணைந்த எதிரணியிடம், சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.

கூட்டு எதிர்கட்சிக்கும், சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் இடையில் நேற்று (புதன்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதன்போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இதுதொடர்பான கடிதத்தை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் 70இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments