பயங்கரவாத தடைச்சட்டம் இனியும் எதற்கு?மங்களராசா அடிகளார்!


இலங்கை அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தை விலக்கிக்கொள்வதாக சர்வதேசத்திற்கு உறுதி மொழி அளித்துள்ளது.அதனை மீறி தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை துருப்பு சீட்டாக வைத்து கைதாகியுள்ள தமிழ் இளைஞர்களிற்கு எதிராக  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வது ஏற்றுக்கொள்ளப்படமுடியாததொன்றென வணபிதா மங்களராஜா அடிகளார் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் சுமந்திரனை கொலை செய்ய, இரண்டு தடவைகள் முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால் தற்போதைய சூழலில் அத்தகைய சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யவேண்டிய தேவையில்லை.

இலங்கை அரசு அரசியல் கைதிகளை தடுத்து வைப்பதற்கு தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினையே பயன்படுத்துகின்றது.அதனால் வடகிழக்கில் பதற்றமான சூழலென காண்பிக்க தற்போதைய குழப்பங்களை பயன்படுத்துகின்றதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் அண்மையில் விடுதலையான அரசியல் கைதி ஜெயராம் இராமநாதனும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய சதி செய்தார்கள்  என்று, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம்,  ஐந்து பேரைக் கைது செய்த சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இவர்கள் ஆரம்பத்தில் சாதாரண சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எனினும்,  பல்வேறு காரணங்களுக்காக,  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் மீது குற்றம்சாட்டுவதற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

காராளசிங்கம் குலேந்திரன், குணசேகரலிங்கம் ராஜ்மதன், முருகையா தவேந்திரன், வேலாயுதன் விஜயகுமார், லூயிஸ் மரியநாயகம் அஜந்தன் ஆகியோர் மீதே நாளை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

No comments