அடக்கி ஆள தொடர்ந்தும் முடியாது:முதலமைச்சர்!

எம்மைக்கட்டுப்படுத்திக்கொண்டு எதனையும் சாதித்துவிடலாமென இந்த அரசு நினைக்கின்றது.ஆனால் அது நிச்சயம் வெற்றியை தரப்போவதில்லையென வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதனால் தான் யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் ஆகும் நிலையிலும், மத்திய அரசாங்கம், தொடர்ந்தும் வடக்கைத் தனது இராணுவக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது எனவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேயடி உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினனுக்கும் வட மாகாண முதமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு, கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில், இன்று புதன்கிழமை நடைபெற்றது. 

இதன்போது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக வினவிய கனேடிய உயர்ஸ்தானிகர், அரசமைப்பைக் கொண்டு வந்தால் நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிககையில், 70 ஆண்டுகளாக பெரும்பான்மைச் சமூகம், சிறுபான்மைச் சமூகத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களைத் தமது அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தது.மத்திய அரசாங்கம், வடக்கை தமது கட்டுப்பாட்டுக்குள்தான் இன்றும் வைத்திருக்கின்றது. ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர், வடபகுதியில் உள்ளனர். அதேபோல சகல தரப்பினரும் எம்மை கட்டுப்படுத்தவே நினைக்கின்றனர். அரசின் சட்டங்களும் கூட தமிழ் மக்களிற்கு எதிராக இருக்கின்றன.

இதனாலேயே தமிழ் மக்கள் மத்தியில் கடந்த காலங்களில் போராட்டங்கள் வெடித்திருந்தன.

இவ்வாறான கட்டுப்பாட்டுக்கு மத்தியில், ஏதாவது அரசியல் ரீதியான விடயங்களைத் தீர்ப்பதென்பது கடினமெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முடியுமானால் அரசமைப்பை மிக விரைவில் உருவாக்கி, அந்த அரசமைப்பை இரு இனத்தவர்களும் ஏற்றுக்கொண்டு, முன்னோக்கி நகர்த்தினால் மாத்திரமே, இலங்கையில் நிரந்தர தீர்வையும் அபிவிருத்தியையும் உறுதிப்படுத்த முடியும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments