கட்டி அடிக்கவா?மாநகர முதல்வர் கேள்வி


யாழ்.மாநகர சபை பிரதி முதல்வரை கட்டி வைச்சு என்னால் அடிக்க முடியாது என யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.
யாழ்.மாநகர சபையின் கூட்டம் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
அதன் போது நடைபெற்ற விவாதம் ஒன்றில் பிரதி முதல்வர் எதிரக்கட்சி உறுப்பினர் மணிவண்ணன் விகிதாசார உறுப்பினர் என கூறி அவரை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்தார்.
அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து , அவரின் கருத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும், விகிதாசார உறுப்பினர் என ஒருவரை குறிப்பிட்டு கூறும் போது இந்த சபையில் உள்ள 18 விகிதாசார உறுப்பினர்களையும் அது குறிக்கும் எனவும் , சபை உறுப்பினர்களை கௌரவம் இன்றி பேச முடியாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கு முதல்வர் தான் அந்த கருத்தை அறிக்கையில் இருந்து நீக்கி விடுகிறேன் என அறிவித்தார். அதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர்கள் உடன்படவில்லை. பிரதி முதலவர் சபையில் எழுந்து நான் அந்த கருத்தை வாபஸ் பெறுகிறேன் என கூற வேண்டும் என தெரிவித்தார்கள்.
அதனை அடுத்து முதல்வர் , பிரதி முதல்வரிடம் வாபஸ் பெறுங்கள் என கேட்டார். அதற்கு பிரதி முதல்வர் தன் கருத்தை வாபஸ் பெற மாட்டேன் என ஆணித்தரமாக கூறி அமர்ந்தார்.
அதனை தொடர்ந்து சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பிரதி முதல்வரின் கருத்து இந்த சபையில் விகாதாசார முறைமையில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளது என எதிர்கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதற்கு முதல்வர் தன்னால் என்ன செய்ய முடியும். பிரதி முதல்வர் தன் கருத்தை வாபஸ் பெற முடியாது என கூறுகின்றார். கருத்தை வாபஸ் பெறு என கட்டி வைச்சு அடிக்கவா முடியும் என அப்பாவித்தனமாக சபையில் கேட்டார்.
அதனை அடுத்து எழுந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர் செல்வவடிவேல் , இந்த சபையில் உள்ள அனைவரும் உறுப்பினர்களே . இங்கே விகாதாசார முறைமையில் தெரிவு செய்யப்பட்டவர்களை அவமதிக்கும் மாறு சக உறுப்பினர் தெரிவிக்கும் கருத்தை ஏற்றுகொள்ள முடியாது என தெரிவித்தார்.
அத்துடன் மேலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பிரதி முதல்வரின் கருத்துக்கு எதிர்ப்புக்களை தெரிவித்தனர். கடுமையான எதிர்ப்பு சபையில் எழுந்ததால் இறுதியில் பிரதி முதல்வர் எழுந்து தனது கருத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.அதேவேளை ஆளும் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் விகிதாசார முறைமையில் தெரிவான உறுப்பினர்கள் எந்த விதமான கருத்தையும் தெரிவிக்காது மௌனம் காத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments