மகிந்தவுடனான நட்பு பதவியைப் பறித்தது

சிறிலங்கா அரசாங்கத்தின் உல்லாசப் பயண சலுகைகளைப் பெற்றுக் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இயன் பாய்ஸ்லி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன், இவரை தமது கட்சியில் இருந்து  இடைநிறுத்துவதாக ஜனநாயக ஒற்றுமைக் கட்சியும்,  அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு மாறாக இயன் பாய்ஸ்லி, 2013ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தின் சலுகைகளைக் பெற்றுக் கொண்டார் என்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து நடத்தப்பட்ட நாடாளுமன்ற நிலையியல் குழுவின்  விசாரணைகளில், சிறிலங்கா அரசாங்கத்தின் உல்லாசப் பயண சலுகைகளைப் பயன்படுத்தி இரண்டு தடவைகள் இவர் சிறிலங்காவுக்கு குடும்பத்துடன் பயணங்களை மேற்கொண்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தவே சிறிலங்கா அரசாங்கம் இந்தச் சலுகைகளை வழங்கியது.

இதன்படி இயன் பாய்ஸ்லிக்கு சுமார் 1 இலட்சம் பவுண்ட் நிதி சிறிலங்கா அரசாங்கத்தினால் செலவிடப்பட்டது.

விதிமுறைகளை மீறி, சிறிலங்கா அரசாங்கத்தின் சலுகைகளைப் பெற்றுக் கொண்டதை இயன் பாய்ஸ்லி ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கோரியிருந்தார்.

இதையடுத்து, அவரை வரும் செப்ரெம்பர் 4ஆம் நாள் தொடக்கம், 30 நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய நாடாளுமன்ற சபாநாயகர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தக் காலகட்டத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரப்பிரசாதங்கள் மற்றும் ஊதியத்தை அவர் இழப்பார்.

வரும் நொவம்பர் மாதம் வரை இவரால் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க முடியாது,

அதேவேளை, இவரை ஜனநாயக ஒற்றுமைக் கட்சி  உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தியுள்ளதுடன், பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முடிவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது.

No comments