13இற்கு வெள்ளையடிப்பு: வருகின்றது தமிழரசு!

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக மாகாணசபையுடன் விடயத்தை முடித்துக்கொள்ள தமிழரசுக்கட்சி ரணிலுடன் இணங்கி வந்துள்ளது. அவ்வடிப்படையிலேயே மாகாண சபைகளுக்குரிய தேர்தலை நடத்த முன்னர் அரசியல் தீர்வை முன்வைக்கவேண்டுமென்ற இரா.சம்பந்தரின் பிரச்சாரம் உச்சமடைந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாகவே மாகாணசபையாவது மிஞ்சியிருக்கட்டுமென்ற கோசத்துடன் மக்களை திசை திருப்ப அதற்கான தேர்தலை உரியநேரத்தில் நடத்தாது காலத்தை இழுத்தடிப்பதானது ஜனநாயக அம்சங்களை மீறும் செயலாகுமென்ற தமிழரசுக்கட்சியின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனின் பேச்சும் வெளியாகியுள்ளது.

உண்மையில் மாகாணசபைக்கிருக்க வேண்டிய காணி மற்றும் காவல்துறை இல்லாதிருப்பது பற்றி பேசப்படுகின்ற போது அது பற்றி தமிழரசு வாய் திறக்காதிருக்கின்றது. அது பற்றி பேச தயாராக இல்லாத தமிழரசு விடுதலைப்புலிகள் காலத்து விழிப்புக்குழுக்களை உருவாக்கி சட்டம் ஒழுங்கை பேண வலியுறுத்திவருகின்றது.

இந்நிலையில் மாகாணசபை தேர்தலின் முன்னராக 13-வது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபை முறைமைக்கு வெள்ளையடித்து தமிழ் மக்கள் முன்னிறுத்த அரசும் தமிழரசும் மும்முரமாக செயற்பட்டுவருகின்றன.

இந்நிலையில்  மாகாணமாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் எல்லை நிர்ணய அறிக்கையானது சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அது இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும். அதன்பிறகு விவாதம் நடத்தப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படவேண்டும்.

அவ்வாறு நிறைவேற்றப்படாதபட்சத்தில் சபாநாயகர் தலைமையில் மீளாய்வுக் குழுவொன்று அமைக்கப்படவேண்டும். மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ளபோதிலும் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதுடன், எந்தவொரு குழுவும் நியமிக்கப்படவில்லை.

அதேவேளை, வாக்குரிமையென்பது மக்களுக்கான உரிமையாகும். அந்த வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்காக தேர்தல் நடத்தப்படுவது ஜனநாயகக் கட்டமைப்பின் அடிப்படை அம்சமாகும். குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அது கட்டாயம் நடக்கவேண்டும்.பதவிக்காலம் முடிவடைந்துள்ள மூன்று சபைகளுக்கான தேர்தல்கள் இன்னும் நடத்தப்படவில்லை. அந்த மாகாணத்தில் வாழும் மக்களின் உரிமை மீறப்பட்டுள்ளது. எனவே, மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டத்தில் உரிய மறுசீரமைப்புகளை மேற்கொண்டு மேலும் காலதாமதப்படுத்தாது அரசு தேர்தலை நடத்தவேண்டும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிடைத்த அனுபவத்துக்கமைய 50இற்கு 50 கலப்புமுறையில் தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயமாக எந்தவொரு கட்சிக்கும் ஸ்திரமான ஆட்சியை அமைக்கமுடியாது. எனவே, இந்த விகிதாசாரமானது 70இற்கு 30 ஆக மாற்றப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

2017ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் 17ஆவது சரத்தை அரசு நீக்கினால் மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்தமுடியும்.

தேர்தலை நடத்திய பின்னர் தேவையான நேரத்தை எடுத்து தேர்தல் மறுசீரமைப்புப் பற்றிக் கலந்துரையாடி தீர்மானத்துக்கு வரமுடியுமென சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments