நாடு முழுவதிலும் 3325 பேர் கைது

நாடு முழுவதிலும் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 3325 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல், போக்குவரத்து விதி மீறல், பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபர்கள் உள்ளிட்டவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய நேற்றுமுன்தினம் இரவு 9 மணிமுதல் நேற்றுக்காலை 8 மணிவரையான பகுதியில் நாடு முழுவதிலும் இந்த விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதிகரித்துள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் வாகன விபத்துக்களை தடுக்கும் நோக்கிலேயே இந்த விசேட சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதில் 16 ஆயிரத்து 422 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குடிபோதையில் வாகனங்களைச் செலுத்திய 541 பேரும், பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 948 பேரும், பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காகத் தேடப்பட்டுவந்த 938 பேரும், ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மதுசாரம் உற்பத்தி செய்த 807 பேரும், வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட 94 பேருமாக 3325 பேர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக 5 ஆயிரத்து 808 பேருக்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கடந்த ஒரு வருட காலத்துக்குள் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 48,129 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 22 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவதாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், மாலைதீவு, பொலிவியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 19,441 பேரிடமிருந்து 173 கிலோ 319 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

கஞ்சா கடத்தல் தொடர்பில் 28,688 பேர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களிடமிருந்து 2,975 கிலோ கஞ்சா மீட்கப்பட்டிருப்பதாகவும் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments