Header Shelvazug

http://shelvazug.com/

இராணுவம் தேவையில்லை:முதலமைச்சர் ஆணித்தரம்!

ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு இராணுவம் அவசியமானது. தமது சொந்த நாட்டை ஏனைய நாடுகளின் ஆக்கிரமிப்புக்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பதற்கும் உள்நாட்டில் அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதற்கும் இராணுவத்தின் பணி அவசியமானது. ஆனால் எமது பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும்,உணவகங்களை நடத்துவதற்கும், காணிகளைத் தம் வசப்படுத்தி வைத்திருப்பதற்கும்,குளங்களைப் புனரமைப்புச் செய்வதற்கும் இராணுவ வீரர்களின் சேவைகள் தேவைப்படமாட்டாதென வடமாகாண முதலமைச்சர் தெளிவாக அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் போர் முடிந்து அடுத்த மே மாதம் 10 வருடங்கள் ஆகப் போகின்றது. இன்னமும் எம்மைப் போர்க்கால மக்களாகப் பார்த்து இராணுவ கண்காணிப்பை முடுக்கி வைத்து வருவது எம் மேல் நம்பிக்கை இன்மையைக் காட்டுகின்றது. படிப்படியாக இராணுவ பிரசன்னத்தைக் குறைப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் தந்திருப்பினும் அது நடைபெறாமலே இருக்கின்றது. மாறாக குற்றச் செயல்கள் இங்கு கூடியுள்ளன. அவற்றைத் தடுக்க எமக்கு அதிகாரங்கள் தரப்படவில்லை. பொலிசார் எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை. இராணுவம் வெளியேறி பொலிஸ் அதிகாரம் எமக்குக் கையளிக்கப்பட்டால் இன்றைய வன்முறைக் கலாச்சாரத்தை வடக்கில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது ஒரு பெரிய காரியமன்று. உள்;ர் வாசிகளை ஆட்கொண்டு வெளியூர்வாசிகள் தமது காரியங்களைச் சாதித்துக் கொள்ள எமது மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். 

இந் நிலையில் வேலைத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை இராணுவத்திற்கு வழங்கி அதன் மூலம் எமது வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதென்பது இந் நாட்டின் அடிப்படைக்கொள்கைகளுக்கு முரணான ஒரு செயற்பாடாகவே அமையும். இதனால்த் தான் இப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தின் செறிவை குறைக்குமாறு நான் பல இடங்களிலும் எடுத்துரைத்து வருகின்றேன். நீதிபதிகள் போல் இராணுவத்தினரும் ஒதுக்குப் புறமாக இருந்து தமது கடமைகளை ஆற்ற வேண்டும், மக்கள் மனதைத் தம் வசப்படுத்த வேண்டும் என்ற கருத்தில் மக்களுடன் இராணுவத்தினரைச் சேர்ந்து வாழவிடுவது எதிர் காலத்தில் பல சங்கடங்களை ஏற்படுத்தும்.

இராணுவ அதிகாரிகள் மீதோ, போர் வீரர்கள் மீதோ எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும்எனக்கு இல்லை. இராணுவ உயர் அதிகாரிகளுடன் நான் சிறந்த உறவை வெளிப்படையாகக் கொண்டிருக்கின்றேன். ஆனால் கொள்கை அடிப்படையில் படையினர் முன்னெடுக்குஞ் செயற்பாடுகள் கபட நோக்கங்கள் கொண்டிருக்கக் கூடாது.எம்மை வாழ வைப்பதாகக் கூறிக் கொண்டு எம்மை எஞ்ஞான்றும் கட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்பட வேண்டிய மக்களாக கணித்து வாழக் கூடாது. 

நாம் வாழ்வது எமது பாரம்பரிய நிலங்களில். இங்கு இருக்கும் இயற்கை வளங்கள் யாவும் இங்குள்ள மக்களுக்கே சொந்தம். அவற்றை சூறையாடிச் செல்வதையோ தொடர்ந்து ஆக்கிரமிப்பில் வைத்து வருவதையோ எமது மக்கள் தொடர்ந்து ஏற்றுக் கொள்வார்கள் என்று எண்ணக் கூடாது. ஏதாவது எச்சில் துண்டுகளை எறிந்தால் அவர்கள் எம்வசம் இருப்பார்கள் என்றும் எண்ணக் கூடாது. எமது காணிகள் எமக்கு எந்தளவுக்கு முக்கியமோ எமது சுதந்திரமும் எமக்கு மிக முக்கியம். எம்முடன் கலந்தாலோசித்தே எமக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். எம்மைப் பங்குதாரர்களாக ஏற்றே எமக்கான நன்மைகள் செய்து தரப்பட வேண்டும். எமக்கான அபிவிருத்திகளை எமக்கூடாகச் செய்ய முன் வாருங்கள். எமக்கூடாக எனும் போது நான் மாகாண நிர்வாகத்தையே சுட்டுகின்றேன். எம்மை உங்களுக்குச் சரிசமமானவர்கள் என்று நீங்கள் ஏற்றுக் கொண்டால்த்தான் பங்குதார வாழ்க்கை பயன் அளிக்கும். அந்நிலையில் மத்தியும் மாகாணமும் சேர்ந்து வேலை செய்யலாம். திட்டங்களையும் நிதியையும் உங்கள் கைவசம் வைத்துக் கொண்டு மாகாண அலுவலர்களைக் கொண்டு உங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதை நாங்கள் கண்டிக்கின்றோமெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments