மிளகாய்ப்பொடி தூவி ஒருகோடி ரூபா கொள்ளை !

ஏ.ரி.எம் இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக எடுத்துச் சென்ற, ரூபா ஒரு கோடிக்கும் அதிகமான பணம் சூட்சமமான முறையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
பணத்தை எடுத்துச் சென்ற குறித்த வேனை வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகில் நிறுத்திவிட்டு குறித்த வேனில் வந்த அதிகாரிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளையில், ஜீப் ஒன்றில் வந்த கொள்ளையர்கள் அவர்கள் மீது மிளகாய் தூள் தாக்குதல் நடத்திவிட்டு இவ்வாறு பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இச்ம்பவம், நேற்று (28) பிற்பகல், புளத்சிங்கள, ஹொரண வீதி, பஹல நாரகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், 119 எனும் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர், ருவன் குணசேகர தெரிவித்தார்.
இக்கொள்ளை இடம்பெறும் சந்தர்ப்பத்தில், வேனில் வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர், கொள்ளையர்கள் பணத்தை எடுத்துச் செல்லும் வகையில் அவரது துப்பாக்கியை வைத்துவிட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர் இக்கொள்ளைச் சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளையர்களை கைது செய்யும் நடவடிக்கையில் புளத்சிங்கள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாகம், இக்கொள்ளை தொடர்பில் அறிந்திருந்ததா என்பது குறித்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

No comments