பிரான்சில் 8 ஆவது அகவையாக இடம்பெற்ற தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம், தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து
நடாத்திய தமிழ்ச்சோலைப் பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் போட்டி 8 ஆவது அகவையாக நடாத்தப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு 450 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டுப்போட்டி, இம்முறை 1350 மாணவர்களுடன் நேற்றுமுன்தினம் (30.06.2018) சனிக்கிழமை, நேற்று முன்தினம் (01.07.2018) ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் Centre Sportif Nelson Mandela மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.

இறுதிநாளான நேற்று முன்தினம் (01.07.2018) ஞாயிற்றுக்கிழமை சார்சல் நெல்சன் மண்டேலா மைதானப்பகுதியில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி முன்பாக காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற ஆரம்ப வணக்க நிகழ்வைத் தொடர்ந்து அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.

பான்ட் தாளவாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் அவர்கள் ஏற்றிவைக்க பிரெஞ்சுக்கொடியை சார்சல் தமிழ் சங்க பரப்புரைப்பொறுப்பாளர் திரு.கணபதிப்பிள்ளை அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் திரு. கிருபா அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை 18.02.1984 அன்று பொலிகண்டிப் பகுதியில் வீரவேங்கை செல்வம் பகீன் அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்மாலை அணிவித்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்புக்கொடியை அதன் செயலாளர் திரு.சாந்திக்குமார் அவர்களும் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகக் கொடியை அதன் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களும் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து இல்லப்பொறுப்பாளர்களால் இல்லக்கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன.

ஒலிப்பிக் தீபத்தை மெய்வல்லுநர் போட்டி முகாமையாளர் திரு.இராஜலிங்கம் அவர்கள் மெய்வல்லுநர் போட்டித் தலைவன் ஞானச்சந்திரன் நிதர்சன் மற்றும் மெய்வல்லுநர் தலைவி பாலச்சந்திரன் கர்சனா ஆகியோரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து வீரர்கள், நடுவர்கள் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றதையடுத்து போட்டிகள் ஆரம்பமாகின.
சோதியா இல்லம் (சிவப்பு), அங்கையற்கண்ணி இல்லம் (நீலம்), ராதா இல்லம் (மஞ்சள்), மாலதி இல்லம் (செம்மஞ்சள்), சார்ள்ஸ் இல்லம் (பச்சை), ஜெயந்தன் இல்லம் (ஊதா)ஆகிய இல்லங்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்தன.
தமிழ்ச்சோலை இல்ல மாணவர்களின் அணிநடை அணிவகுப்பு மிகவும் நேர்த்தியாக அமைந்திருந்தமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அணிவகுப்பு மரியாதையை வீரவேங்கை செல்வம் பகீன் அவர்களின் சகோதரி பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் திரு.மகேஸ், தமிழ்சோலைத் தலைமைப் பணியகப் பொறுப்பாளர் திரு.ஜெயக்குமார், மெய்வல்லுநர் போட்டி துணைமுகாமையாளர் திரு.பீலிக்ஸ், சார்சல் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.டக்ளஸ், தமிழ் சங்கங்களின் கூட்டமைப்புப் செயலாளர் திரு.சாந்திக்குமார், சார்சல் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.டக்ளஸ் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
அணிநடை ஆண்கள் பிரிவில் சோதியா இல்லம் முதலிடத்தையும் சாள்ஸ் இல்லம் இரண்டாம் இடத்தையும் ராதா இல்லம் மூன்றாம் இடத்தையும் பொற்றுக்கொண்டன.

அணிநடை பெண்கள் பிரிவில் சோதியா இல்லம் மற்றும் சாள்ஸ் இல்லம் முதலிடங்களையும் ராதா இல்லம் மூன்றாம் இடத்தையும் பொற்றுக்கொண்டன.

முடிவில் 396 புள்ளிகளைப்பெற்று ராதா இல்லம் முதலிடத்தையும் 388.5 புள்ளிகளைப் பெற்று சாள்ஸ் இல்லம் இரண்டாமிடத்தையும் 255.5 புள்ளிகளைப்பெற்று சோதியா இல்லம் மூன் றாம் இடத்தையும் தமதாக்கிக்கொண்டன.

நிகழ்வுகளை திரு.குருபரன், திரு.பத்மரூபன், திரு. இளங்கோ, திருமதி கவிதா ஆகியோர் திறம்பட தமது அறிவிப்புக்களின் ஊடாகக் கொண்டுசென்றதைக் காணமுடிந்தது.

சிறப்புரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் திருமேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். அவர்தனது உரையில் இந்த புலம்பெயர் மண்ணிலே அந்நிய நாட்டினிலே பல்வேறு மொழிகளைப்பேசுபவர்களுக்கு மத்தியிலே இயந்திரவாழ்க்கைக்கு மத்தியிலே உங்கள் பிள்ளைகளைத் தாய்மண்பற்றோடு தேசிய உணர்வோடு மொழிப்பற்றோடு வளர்த்தெடுத்த பெற்றோரை கரங்கூப்பி வணங்குகின்றோம். அத்தோடு தானுண்டு தன்பாடு உண்டு என்றில்லாமல் இந்த விளையாட்டுப்போட்டிகளை திறம்பட நடாத்திமுடித்த நடுவர்களையும் வணங்கிநிற்கின்றோம். என அவரது உரை தொடர்ந்தது.

நிறைவாக வெற்றிபெற்றவர்களுக்கான மற்றும் இல்லங்களுக்கான பரிசளிப்பு இடம்பெற்றது.

கொடிகள் இறக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.



























































No comments