நரபலி கொடுத்து 23 வருடங்கள்!

இன்று ஓர் இனஅழிப்பு நடவடிக்கையின் 23 அண்டு நினைவு.நூற்றைம்பது வரையான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டும் மேலும் ஏராளமானோர் காயப்பட்டும் போகுமாறு நடத்தப்பட்ட ஒரு தாக்குதலின் நினைவுநாள். இது 23 வருடங்களுக்கு முந்திய நாளின் நினைவு மீட்டல்.
சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவென பெரிய ஆயத்தங்களைச் செய்தது. 3 மாதங்களுக்கு முன் தொடங்கியிருந்த மூன்றாம் கட்ட ஈழப்போரில் புலிகளின் கை ஓங்கியிருந்தது. கடலில் கடற்கலங்களை அழித்திருந்தனர் புலிகள். இரு விமானங்களை அடுத்தடுத்த நாட்களில் சுட்டு வீழ்த்தியிருந்தனர். மண்டைதீவு இராணுவத்தளம் மீது தாக்குதல் நடத்தி பெரிய இழப்பை இராணுவத்துக்கு ஏற்படுத்தியிருந்தனர். (அதையடுத்து மணலாற்றில் மிகப்பெரும் தாக்குதலொன்றைச் செய்ய திட்டமிட்டிருந்தனர். அரசும் அதை அறிந்திருந்தது.)
இந்நிலையில் யாழ்ப்பாணத்தை முற்றாகக் கைப்பற்ற அரசு திட்டம் போட்டிருந்தது. அதன் முதற்கட்டமாக வலிகாமத்தின் முக்கிய பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டம் தான் 'முன்னேறிப் பாய்தல்' என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை.
பெருமளவு எறிகணை வீச்சுடன் இந்நடவடிக்கை தொடங்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்தனர். யாழ்ப்பாணத்தின் முக்கிய பட்டினமான மானிப்பாயிலும் அதற்கடுத்த கிராமமான நவாலியிலும் பெருமளவு மக்கள் வந்து சேர்ந்தனர். பொதுவாகவே பாடசாலைகளிலும் தேவாலயங்களிலும்தான் மக்கள் தஞ்சமடைவர். அதேபோல் நவாலியிலுள்ள கத்தோலிக்கத் தேவாலயமான புனித பேதுருவானவர் கோயிலில் பெருமளவு மக்கள் தஞ்சமடைந்தனர். இராணுவம் சில இடங்களைக் கைப்பற்றியிருந்தது. இராணுவம் முன்னேறிய பகுதியிலிருந்து நீண்டதூரத்தில்தான் நவாலியுள்ளது.

09.07.1995 அன்றுதான் அந்தக் கரியநாள்.

பகல் வேளையில் நவாலி புனித பேதுருவானர் தேவாலயம் மீது சிறிலங்கா விமானப்படையின் 'புக்காரா' விமானம் குண்டுகளை வீசியது. இலக்குத் தப்பவில்லை. சரியாகவே குண்டுகளை வீசியது. ஒரு கணத்தில் எல்லாமே முடிந்துவிட்டன.

தேவாலயமும் அதனுள் தஞ்சமடைந்திருந்த மக்களும் சிதறடிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களை யாழ்ப்பாண நகருக்குக் கொண்டு செல்ல வேண்டும். போதுமான வாகனங்கள்கூட இல்லை.

அன்றிரவு எடுக்கப்பட்ட கொல்லப்பட்டோர் கணக்கெடுப்பு 100 ஐத்தாண்டிவிட்டது. போகப்போக அவை அதிகரித்துச் சென்றன.

இதில் இறப்பு விவரங்கள் சரியாகத் தொகுக்கப்படாமைக்கு முக்கிய காரணம், தாக்குதலுக்குள்ளானோர் இடம்பெயர்ந்தவர்கள் என்பதே.

பெருமளவான உடல்கள் முழுமையாக எடுக்கப்படவில்லை. சதைத்துண்டுகள்தாம் பொறுக்கப்பட்டன. அத்தேவாலயத்தில் தங்கியிருந்த முழுப்பேரின் விவரமும் தொகுத்து முடிக்கப்பட்டிருக்கவில்லை. விவரத்தொகுப்பில் ஈடுபட்டிருந்த நான்கு கிராமசேவையாளர்களும் அத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர்.
இரண்டு கிழமைகள் வரை பொறுத்து, காணாமல் போனவர்களின் விவரங்கள் இந்தப் படுகொலை விவரத்தில் சேர்க்கப்பட்டன. இறுதிக்கணக்காக 140 பேர் மரணம் என்று வந்தாக நினைக்கிறேன்.

யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள், தாதியர்கள் அனைவரும் அயராது பாடுபட்டனர். குறைந்த வசதிகள், மருந்துகளோடு அவர்கள் அயராது போராடினர். இரத்தச் சேமிப்பென்பது அப்போது முழுமையாக இல்லை. நிரந்தர மின்சார வசதியில்லை. மக்கள் இரத்தம் கொடுத்தனர்.

யாழ்குடாநாடு பெரும் அவலத்தைச் சுமந்து நின்றது. ஒருபக்கம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இடப்பெயர்வும் அவர்களின் பராமரிப்பும். இன்னொரு பக்கம் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட, காயமடைந்த கொடுமை.

அதைவிட முன்னேறிய இராணுவத்தை எதிர்கொள்ளவும் குடாநாடு தன்னைத் தயார்ப்படுத்த வேண்டியிருந்தது.

23 வருடங்களின்முன் இந்நாளிற் கொல்லப்பட்டவர்களுக்கு எமது அஞ்சலி.

இன்று பத்துபேர் கொல்லப்பட்டாலும் குறைந்தபட்சம் பன்னாட்டுச் செய்திகளில் வருமளவுக்காவது எமது பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அன்று நிலைமை அப்படியில்லை.

நவாலிப் படுகொலையோடு பலர் நம்பிக்கை கொண்டிருந்தனர். "சர்வதேசம் தலையிட்டு இதற்கொரு முடிவு கிடைக்கும், வத்திக்கான் இதைச் சும்மா விடாது" என்று பலர் பேசி்க்கொண்டனர்.

தேவாலயப் படுகொலைகள் என்று எடுத்துக்கொண்டால், நாவலிதான் முதலாவது அன்று.

நவாலிதான் இறுதியானதும் அன்று. அதற்கு முன்னும் பின்னும் தேவாலயப்படுகொலைகள் சிங்கள அரசால் நடத்தப்பட்டன. (இந்த வரிசையில் இந்துக்கோயில் மீதான தாக்குதல்களும் அதிகம்.) ஆனாலும் வத்திக்கானால் ஏதும் செய்ய முடிந்ததில்லை (முனைந்ததில்லை என்றுகூடச் சொல்லலாம்).

No comments