போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே விரைவில் ஓய்வு



இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றியவரும், போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவரும், போருக்குப் பின்னர் சர்ச்சைக்குரிய ஒருவராகவும் இருந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

வன்னியில் இறுதிக்கட்டப் போரில், 58 ஆவது டிவிசனின் கீழ் கொமாண்டோ படைப்பிரிவுகளை வழி நடத்தியவர் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே.

போரின் இறுதிக்கட்டத்தில், 59 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றினார்.

போரில் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளின் வரிசையில் முக்கியமான ஒருவராக இடம்பிடித்திருந்த இவருக்கு எதிராக, பிரித்தானியாவில் சட்ட நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கப்பட்ட போது அங்கிருந்து தப்பி வந்தார்.

அண்மையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்கு முற்பட்ட போது, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளினால் இவருக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டது.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் 51 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த போது, நல்லிணக்கப்  பொறிமுறைக்கான செயலணி தொடர்பாக விளக்கமளித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் முரண்பட்டு சர்ச்சைக்குள்ளாகியிருந்தார்.

இதையடுத்து. மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே உடனடியாகவே, இராணுவத் தலைமையகத்தில் காலாட்படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

வேறு உயர் பதவிகள் அளிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த இவர் விரைவில் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து  ஓய்வுபெறவுள்ளார்.

இதனால், காலாட்படைகளின் தளபதி பதவியில் இருந்து மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே விடுவிக்கப்பட்டுள்ளார்.

No comments