பனங்காட்டான் எழுதிய ''மைத்திரியின் ஓலமும் சம்பந்தனின் விரக்தியும்: ஒற்றைத் தண்டவாள இருதடப் பயணங்கள்''

எதிர்கட்சித் தலைவர் என்ற ஆசனத்தில் அமர்ந்தவாறு அரசாங்கத்துக்குச் சாமரை வீசிக் கொணடி;ருக்கும் சம்பந்தனால் மட்டுமே மைத்திரி – ரணில் பிரச்சனையை தீர்க்க முடியும். இலங்கையின் அரசியல் பரப்பில் வேறு எவராலும் இது முடியாது.

இலங்கை என்கின்ற நாட்டை அரசியல் ரீதியாக இரு வேறு தேசங்களாகப் பார்க்க வேண்டுமென்னும் நிலைப்பாட்டை மே 18 கொண்டுவந்துவிட்டது.

தமிழ் மக்கள் தங்கள் தாயகத்தில் அழுது புலம்பிச் சுடரேற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் மூழ்கிக் கிடக்க, தென்னிலங்கை போர்வெற்றி நாளென்று கூறி சிங்கள பௌத்த மமதையில் கொண்டாட்டம் நடத்தியது.

பிளவுபடாத பிரிக்க முடியாத ஒரே நாடு என்ற பம்மாத்தில் தமிழ்த் தலைமை கீழிறங்கிப் பேரம் பேச, சிங்கள இனவெறித் தலைமை தமிழரெவரும் கொல்லப்படவில்லை, ஜெனிவாவில் இராணுவம்மீது போர்க்குற்றம் சுமத்தப்படவில்லையென்று வாய்வீச்சு நடத்துகிறது.

இலங்கை பிளவுபடாத ஒரே நாடு என்றால் மே 18ம் திகதி நாடு பூராவும் ஒரே குரலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ந்திருக்க வேண்டுமே!

அவ்வாறு நடைபெறாமல் ஒருபுறம் ஓலமும், மறுபுறம் வெற்றிக் களிப்புமென்றால் இதனை என்னென்று சொல்லலாம்.

தமிழர்களின் களக்கவிஞன் பாடிய, “நீங்கள் வேறு நாடையா, நாங்கள் வேறு நாடு” என்பது ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும், பௌதிக ரீதியாக அவ்வாறாகிவிட்டது என்று கூறினால் தவறிருக்க முடியாது.

இந்தப் பின்னணியில் இருவேறு குரல்களின் தாற்பரியத்தை இங்கு கவனிப்போம்.

ஒரு குரலுக்குரியவர் பேரினவாதத்தின் நிகழ்காலத் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. மற்றைய குரலுக்குரியவர், பிரிக்க முடியாத ஒருமித்த நாடே தீர்வென்று அழுங்குப்பிடியாக நிற்கும் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன்.

முதலாமவரின் குரல் அவரது கோபம், சீற்றம் என்பவற்றின் மொத்தவடிவமாக அமைந்துள்ளது.

இரண்டாமவரின் குரல், இதுவரை கொண்டிருந்த நம்பிக்கையிழந்த நிலையில் கிளம்பும் விரக்தியாக அமைந்துள்ளது.

2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பும் படலத்துக்கு காற்கோள் இட்டவர் சோபித தேரர் என்ற பௌத்த பிக்கு.

பொது வேட்பாளராக மைத்திரியை மகிந்தவிடமிருந்து பிரித்து இழுத்து வந்து, ரணிலுடன் இணைத்து வெற்றிக்கு வழி வகுத்தவர் இந்தத் தேரரே.

அமரராகிவிட்ட தேரரின் பிறந்த தினத்துக்கான நிகழ்வு கொழும்பில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது.

இதற்கு ஜனாதிபதியை அழைக்காது இருட்டடிப்புச் செய்யும் வகையில், அவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லையாயினும், இதனை அறிந்த அவர் தாமாகச் சென்று கடும் கோபத்துடன் உரை நிகழ்த்தியதால் அது மிகச் சூடாக அமைந்தது.

அவரது சீற்றத்தின் அளவினை உரை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது.

எவரையும் பெயர் குறிப்பிட்டு உரை அமையவில்லையாயினும், பிரதமர் ரணிலையும் அவரது ஐக்கிய தேசிய கட்சியையும் அவர் தூள்தூளாக கிழித்துத் தள்ளினார்.

முன்னைய ஜனாதிபதி காலத்திலிருந்த உயர்ரக வாகனங்களை மகிந்தவும் ரணிலும் பங்கு போட்டுவிட்டு, தமக்கு தரமற்ற வாகனங்களை விட்டது,

தேர்தலில் தோல்வியடைந்த மகிந்தவை இரவோடிரவாக விமானப்படை விமானங்களில் வீட்டுக்கு அனுப்பி வைத்தது,

தம்மைக் கேட்காமலே முதல் நூறு நாள் வேலைத்திட்டத்தை அறிவித்தது,

அரசாங்க வங்கிகளை மூடி தனியார் வங்கிகளை விரிவுபடுத்த ரகசியமாக திட்டம் போட்டது,

கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து முடிக்க வேண்டிய பல வேலைகளை ஏதோ காரணங்களால் செய்யாது விட்டது,

ரணில் தரப்பினால் அமைச்சரவைக்குக் கொண்டு வரப்பட்ட பல பிரேரணைகளை தாம் தடுத்து நிறுத்தியது என்று அழாக்குறையாக உள்வீட்டு விடயங்கள் பலவற்றை தமது உரையில் மைத்திரி சொல்லி முடித்தார்.

அமைச்சரவை முடிவுகளை கூட்டுப் பொறுப்பு என்று சொல்வார்கள். அவைபற்றி எவரும் வெளியில் வாய் திறக்கக்கூடாது.

ஆனால், அமைச்சரவையின் தலைவராக இருக்கும் ஜனாதிபதியே பொதுவெளியில் அமைச்சரவை விவகாரங்களை விமர்சித்தது முறையா என்ற கேள்வி இங்கு எழுகிறது.

கோபத்தின் உச்சியில் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் அவர் இந்த உரையை நிகழ்த்தியதாலேயே இவ்வாறு பல விடயங்களைப் போட்டுடைத்தாரென்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

அரசுக்குள் இடம்பெற்றுவரும் இருமுனைப் போராட்டம் (மைத்திரி எதிர் ரணில்), இப்போது கூட்டரசை பிளவு நிலைக்குக் கொண்டுவந்துள்ளது.

தமக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ரணில் விரும்பி வரவேற்ற காரணம் இப்போது பகிரங்கமாகியுள்ளது.

ஏற்கனவே பிளவுபட்டிருந்த சுதந்திரக் கட்சியில் மேலும் 16 பேர் இப்போது தனிக்குழுவாக மாறியுள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகள் மைத்திரியை பலமிழக்கச் செய்யும் என்பதும், தம்மை மேலும் பலப்படுத்தும் என்பதும் ரணிலுக்கு நன்கு தெரியும்.

காலங்கடந்து இதனைப் புரிந்திருக்கும் மைத்திரி, இப்போது வெளியரங்க நிகழ்வுகளில் தமது சோகத்தைப் புலம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

மைத்திரியின் கருத்துக்கு ரணில் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

மைத்திரியின் உரை சம்பந்தமாக எவரும் எந்தக் கருத்தும் தெரிவிக்கக் கூடாதென்று தமது கட்சியின் ஒவ்வொருவருக்கும் அவர் உத்தரவும் பிறப்பித்துள்ளார்.

ரணிலின் இந்த எதிர்பாராத முடிவு அவர் ஏதோவொரு முடிவுக்கு வந்துள்ளாரென்பதை தெரிய வைக்கிறது.

அரசியலில் மௌனம் என்பது பல்லாயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய பயங்கர ஆயுதம் என்பது அதில் பயணிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும்.

இதன் பிரதிபலிப்பாக நாடாளுமன்றம் அதன் ஆயுட்காலத்துக்கு முன்னராகவே கலைக்கப்பட்டு திடீர்த் தேர்தல் நடத்தப்படலாமென கொழும்பு ஊடகங்கள் ஊகம் வெளியிட ஆரம்பித்துவிட்டன.

இது தெற்கின் அரசியல் நிலை!

இப்படித்தான் தமிழர் தரப்பின் அரசியல் பயணமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புதிய அரசியலமைப்பு, வழிகாட்டற் குழுவின் அறிக்கை, இனப்பிரச்சனைத் தீர்வு என்பன வெறும் அறிக்கை அளவிலேயே சட்டம் போட்டுச் சுவரில் கொழுவும் நிலைக்கு வந்துவிட்டன.

2015 ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை நம்பி மைத்திரியை ஆதரித்தவர்கள் கூட்டமைப்பினர். சம்பந்தனும் அவரது தமிழரசுக் கட்சியுமே இதில் முன்னிலை வகித்தவர்கள்.

அந்த நம்பிக்கையிலேயே 2016 இறுதிக்குள் நிச்சயம் தீர்வு வருமென்று சம்பந்தன் கூறி வந்தார்.

பின்னர் 2017 தைப்பொங்கல், தீபாவளி, அடுத்த புத்தாண்டு என்று நம்பிக்கைக்கான கால எல்லையை அனுமார் வால்போல சம்பந்தன் தாமாகவே இழுத்துச் சென்றார்.

சில மாதங்களுக்கு முன்னர் சம்பந்தனின் லெப்டினன்ட் சுமந்திரன் கனடாவிலுள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்று இக்காலத்தில் கிடைத்தால் தமது பணி முடிந்ததென்று கூறி தாம் அரசியலிலிருந்து சென்றுவிடுவதாகச் சொன்னார்.

தற்செயலாக இது எதுவும் நடைபெறவில்லையெனில் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு அரசியலிலிருந்து தாம் விடைபெற எண்ணுவதாகவும் கூறினார்.

ஆக, இரண்டில் எது நடந்தாலும் சுமந்திரன் அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட மாட்டாரென்று நம்பலாமா? சொன்னதைச் செய்வாரா?

அரசியலில் இதுவெல்லாம் சகஜமென்று கனவுலக நாயகரொருவர் சும்மாவா சொன்னார்?

இதுபோகட்டும்! இப்போது சம்பந்தன் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்?

சில தினங்களுக்கு முன்னர் இலங்கை சென்ற அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் குழுவொன்று சம்பந்தனை சந்தித்து உரையாடியது.

இதன்போது தமிழர் பிரச்சனைக் கதையை ஆதியோடந்தமாக தெரிவித்த சம்பந்தன் இறுதியில் தெரிவித்த கருத்து இது.

“குறிப்பிட்ட கால எல்லைக்குள் புதிய அரசமைப்புப் பணிகள் இடம்பெறாவிட்டால் தமிழ் மக்களும் கூட்டமைப்பினரும் தமது நிலைப்பாட்டை மீளாய்வு செய்ய நிர்ப்பந்திக்கப்படுவர்” என்பது.

அந்தக் கால எல்லை என்னவென்பதை அவர் மூடுமந்திரமாகவே வைத்துள்ளார்.

தற்போது தெற்கில் என்ன நடைபெறுகிறது என்று சம்பந்தன் இக்குழுவுக்கு பின்வருமாறு தெரிவித்தார்.

“ஒரு புதிய அரசியலமைப்பின் தேவையையும் அதனால் ஏற்படக்கூடிய நன்மையையும் சிங்கள மக்கள் மத்தியில் இதுவரை கொண்டு சேர்க்கவில்லை. அனைத்து மக்களையும் நியாயமாகவும், சமத்துவமாகவும் நோக்க வேண்டிய சிங்களத் தலைவர்களில் சிலர் கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள்” என்பது.

இறுதியில் சம்பந்தன் கூறிய கருத்து சிங்கள் ஆட்சித் தரப்பின் சமகால இடிபாட்டை எடுத்துக்கூறுவது.

“அடிப்படை பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டுமெனில் ஜனாதிபதியும் பிரதமரும் சேரந்து பயணிக்க வேண்டும்” என்பது.

சோபித தேரர் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால எடுத்துக் கூறியதும், பிரதமர் ரணில் இதற்குப் பதிலளிக்காது இருப்பதும், சம்பந்தன் இப்போது தெரிவித்திருப்பதும் ஒன்றையே மையமாகக் கொண்டது.

எதிர்கட்சித் தலைவர் என்ற ஆசனத்தில் அமர்ந்தவாறு அரசாங்கத்துக்குச் சாமரை வீசிக் கொண்டிருக்கும் சம்பந்தனால் மட்டுமே மைத்திரி – ரணில் பிரச்சனையை தீர்க்க முடியும். இலங்கையின் அரசியல் பரப்பில் வேறு எவராலும் இது முடியாது.

இது முடியாமல் போகுமானால் மைத்திரியின் ஓலமும், ரணிலின் மௌனமும், சம்பந்தனின் விரக்தியும் எங்கோ ஓரிடத்தில் ஒன்று சேரும்.

-பனங்காட்டான்-

No comments