சட்டவிரோதமாக மலேசியா செல்ல முயன்ற 40 பேர் தாய்லாந்தில் கைது

வேலைக்காக சட்டவிரோதமாக மலேசியா செல்ல முயன்ற மியான்மரைச் சேர்ந்த 40 பேரை தாய்லாந்து ராணுவம் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 34 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள் எனத் தெரிய வந்துள்ளது.

இவர்களை லாரிகள் வழியாக கடத்தி வர முயன்ற தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு ஓட்டுநர், மியான்மரைச் சேர்ந்த இரு ஓட்டுநர்கள் உள்பட மூன்று ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மியான்மரின் எல்லையோர பகுதியான கவ்தவுங் பகுதியிலிருந்து  தாய்லாந்தின் சும்போன்(Chumphon) பகுதிக்கு சென்று கொண்டிருந்த பொழுது, உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த லாரிகளை ராணுவத்தினர் தடுத்துள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து 460 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சும்போன் வழியாக தொடர்ந்து மனித கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

கவ்தவுங் எல்லை பகுதியிலிருந்து சும்போன் அழைத்து வர மியான்மரைச் சேர்ந்த ஒவ்வொருவரிடமும் 2000 பட் (இந்திய மதிப்பில் 4000 ரூபாய்) பெற்றதை ஓட்டுநர்கள் ஒப்புக்கொண்டதாக தாய்லாந்து ஊடக தகவல்கள் குறிப்பிடுகின்றன. சும்போன் அடைந்த பிறகு வேறொரு குழுவிடம் ஒப்படைத்து, அவர்கள் வழியாக மியான்மரைச் சேர்ந்த 40 பேரையும் மலேசியாவிற்கு கடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மியான்மர் அரசின் 2014ம் ஆண்டு கணக்குப்படி, மியான்மரைச் சேர்ந்த 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைத்தேடி தாய்லாந்து, மலேசியா, சீனா, சிங்கப்பூர், தென் கொரியா, ஜப்பான், வளைகுடா நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதில் ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாகவும் செல்வதும் தொடர்ந்து வருகின்றது. 

No comments