காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினை புறக்கணித்து போராட்டம்!


இலங்கை அரசினால் தோற்றுவிக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தினை புறக்கணித்து முல்லைதீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றன.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலக பணிகள் இன்று 2ம் திகதி முல்லைத்தீவிலும் 13ஆம் திகதி திருகோணமலையிலும் 23ஆம் திகதி கிளிநொச்சியிலும் பொதுமக்கள் சந்திப்புக்களை மேற்கொள்ள உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேநேரம், காணாமல்போனார் தொடர்பான அலுவலகத்தின் 12 பிராந்திய காரியாலயங்களில் 8 காரியாலயங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய வடக்கு - கிழக்கு மாவட்டங்களிலும், கண்டி, குருநாகல், மொனராகலை மற்றும் மாத்தறை ஆகிய ஏனைய மாவட்டங்களில் இந்தப் பிராந்திய காரியாலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய அமர்வை புறக்கணித்துள்ள முல்லைதீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள்  காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகளது அழைப்பினையும் நிராகரித்திருந்தனர்.

முன்னதாக மக்கள் சந்திப்பிற்காக வருகை தந்திருந்த காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள் வெளியே கவன ஈர்ப்பு போராட்டத்திலீடுபட்டுள்ள மக்களை சந்தித்துப்பேசினர்.

போராட்டத்திலுள்ளவர்கள் அமர்வினில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த அழைப்பு விடுத்த போதும் அவர்கள் அதனை நிராகரித்திருந்தனர்.

இந்நிலையில் மக்கள் சந்திப்பின் பின்னராக போராட்டகாரர்களை சந்தித்து அவர்களது நிலைப்பாட்டை பதிவு செய்வதாகள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களது வருகையினை எதிர்பார்த்தும் தமது புறக்கணிப்பினை வெளிப்படுத்தவும் மக்கள் தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

No comments