சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கையிடம் ஐ.நா வலியுறுத்தல்!

போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்காக சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். இந்தக் கடிதத்தில்ரோம் உடன்படிக்கையை அங்கீகரிப்பதுடன், சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன், சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றின் ஒரு தரப்பான இணைந்து கொள்வதற்குத் தேவையான ரோம் உடன்படிக்கையை தாமதமின்றி ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

இந்தஉடன்படிக்கையை உள்நாட்டிலும் ஏற்றுக்கொள்ளும் நாடுகள் யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச நீதிமன்றத்தினால் தொடரப்படும் வழக்கு விசாரணைகளில் பங்குதாரராக இருக்கும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உண்மை, நீதி நிலைநாட்டப்படுவதுடன், மீள் நிகழாமை உறுதிப்படுத்தப்படுத்துவதுடன், தண்டனைகளில் இருந்து விலக்குப்பெறும் தண்டனை முக்தி முடிவுறுத்தப்பட வேண்டியது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தும் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறும் மனிதஉரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு இணங்கிய பல பரிந்துரைகள் தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபனவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இந்தத் துறைகளைஅடையாளம் கண்டுகொள்ளும் போது, 88 நாடுகளினால் முன்மொழியப்பட்ட பரிந்துரைகள் - அறிவிப்புக்கள் மற்றும் ஸ்ரீலங்கா அரசின் சமர்ப்பிப்புக்கள் மற்றும் பதில்களையும், இரண்டாவது உலக காலஆய்வு கூட்டத்தில் நடைமுறைப்படுத்துவதாக இணங்கிய 113 பரிந்துரைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு மனித உரிமைகள் ஆணையாளர் செயீ் ராத் அல் உசைன் வலியுறுத்தியுள்ளார்.

சிவில் மற்றம்அரசியல் உரிமைகள், பொருளாதார, சமூக, கலாசாரஉரிமைகள, மாற்றத் திறனரிகளின் உரிமைகள், சிறுவர் உரிமைகள், பூர்வீகக் குடிகளின் உரிமகள்,வீட்டுப் பணியாளர்களின் உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகளைபாதுகாக்கும் சர்வதேச உடன்படிக்கைககளுக்கு அமைய சர்வதேச தரத்திலான சட்டங்களை இயற்றிக்கொள்ளுமாறும்ஸ்ரீலங்கா அரசை வலியுறுத்தியுள்ளார்.

புதிய அரசியல்யாப்பை தயாரிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசு முன்னெடுத்துள்ள முயற்சிகளை பாராட்டியுள்ளமனித உரிமைகள் ஆணையாளர் அதன்போது கவனம் செலுத்தப்பட வேண்டிய அடிப்படைக் காரணிகள்குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார்.

அரசியல்யாப்புமறுசீரமைப்பு நடவடிக்கையின் போது சம உரிமை இனப்பாகுபாடு அற்ற நிலை, அதிகாரப்பரவலாக்கல், நீதிமன்ற சுயாதீனத் தன்மை ஆகிய அடிப்படை சித்தாந்தங்கள்கருத்தில்கொள்ளப்பட வேண்டும் என்று அல்உசைன் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையகங்களுக்கான சர்வதேச அமைப்பினால் ஏ தரத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசிடம் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன்போது சர்வதேச தரத்திற்கு ஏற்ப ஆணைக்குழுவிற்கு தேவையான ஆளணி, தொழில்நுட்பம் மற்றும் ஏனைய வளங்களையும் தடையின்றி பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments