உலகமே எதிர்பார்த்த டிரம்ப் - கிம் சந்திப்பு தொடங்கியது!



அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கினர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று காலை சிங்கப்பூரில் நடைபெற்றது.

இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்துக்கொள்வது வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும். இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு நாட்டு தலைவர்களும் சுமார் 48 நிமிடம் பேசினர்.

சந்திப்பு முடிந்து வெளியே வந்ததும் இரு நாட்டு தலைவர்களும் ஓட்டலின் பால்கனியில் நின்றபடி செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர்.

சந்திப்புக்கு பிறகு கருத்து தெரிவித்த டொனால்டு டிரம்ப் கிம் ஜாங் அன் - உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்ததாக கூறினார். மேலும், கிம் ஜாங் அன்னுடன் இணைந்து மிகப்பெரும் பிரச்சினை, குழப்பங்களுக்கு தீர்வு காண முடியும் என்றும், அணு விவகாரத்தை பொறுத்தவரை இணைந்து பணியாற்றி, அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு தொடர்பாக எழுந்த சந்தேகங்கள் மற்றும் யூகங்களை கடந்து வந்துள்ளதாகவும் இந்த சந்திப்பானது அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் கிம் ஜாங் அன் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிலையில், கிம் ஜாங் அன் - டொனால்டு டிரம்ப் இடையே 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களின் முக்கிய உதவியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இரு தலைவர்களும் தனியாக ஆலோசனை நடத்துவதால், பல முக்கிய விவகாரங்கள் குறித்து நேரடியாக இருவரும் விவாதிக்கலாம் என கூறப்படுகிறது.

No comments