போரில் மக்களிற்கு மரணில்லை:விடாப்பிடியாக இலங்கை இராணுவம்!


அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில், இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதைச் சமாளிக்கும் விதத்தில், இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் தேவைப்பட்டால் மாத்திரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொள்வார் என்று இராணுவத் தளபதியின் அறிவிப்பு பின்னர் வெளியாகியுள்ளது. இராணுவத்தின் இந்தத் திடீர் நடவடிக்கை ஏன்? சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். 

இராணுவத்தினரின் இந்த நகர்வுக்குப் பின்னாலும் காரணம் இருக்கின்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்னவுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் இடையில் இந்தச் சந்திப்பில் கடும் முறுகலும் ஏற்பட்டிருந்தது. இறுதிக் கட்டப்போரில் இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.‘போரின் போது பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்று, இராணுவத்தில் உள்ள எவரும் கூறமாட்டார்கள். உலகில் உள்ள எந்த இராணுவமும் அவ்வாறு கூறாது. இது ஒரு போர்’ என்றும் ராஜித குறிப்பிட்டிருந்தார்.

 ராஜிதவின் குற்றச்சாட்டுத் தொடர்பில், இராணுவப் பேச்சாளரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.‘நான் இங்கு ஒரு மோதலில் ஈடுபட விரும்பவில்லை. இராணுவத்துக்கு எதிராக அமைச்சர் எதையும் குறிப்பிட்டார் என்று நான் நினைக்கவில்லை. ஒரு போரில் சில சம்பவங்களில் இழப்புகள் ஏற்படலாம் என்று புரிந்து கொண்டேன்’ என்று இராணுவப் பேச்சாளர் சுமித் அத்தப்பத்து பதிலளித்திருந்தார். இந்த விடயமே இப்போது வில்லங்கமாகியிருக்கி ன்றது. 

போரின்போது இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற சாதாரண உண்மையைக் கூட இராணுவம் ஏற்றுக் கொள்ளமறுக்கின்றது. இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க, போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு தாங்கள் தயார் என்று பல தடவைகள் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது பேச்சுக்கு எதிர்மாறாக செயல் அமைந்திருக்கின்றது.அமைச்சர் ராஜித கூறிய உண்மையை, ஏற்றுக் கொண்ட இராணுவப் பேச்சாளருக்கு இராணுவத் தளபதி வாய்ப்பூட்டுப் போட்டிருக்கின்றார். 


எந்தவொரு படையினரும், உண்மையைச் சொல்வதையோ, அதை ஏற்றுக் கொள்வதையோ இராணுவம் விரும்பத்தகாத வடிவத்தில் பார்க்கின்றது என்பதை, இந்தத் தடையூடாக இராணுவத்தளபதி செய்தியாகச் சொல்லியிருக்கின்றார். நாட்டின் அரசியல் தலைமைகள், பன்னாட்டு விசாரணையை உள்நாட்டு விசாரணை என்று சுருக்கியுள்ளன. உள்நாட்டு விசாரணை நடந்தால், படைத்தரப்பினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால், என்ன நடக்கும் என்பதற்கு இந்த விவகாரம் வெறும் ‘உதாரணம்’. இத்தகையதொரு சூழலில், இலங்கை அரசு இறுதிக்கட்டப் போர் தொடர்பில் நியாயமான விசாரணையை நடத்தும் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருப்பது அடிமுட்டாள்தனமின்றி வேறு எதுவுமில்லை

No comments