சத்தமின்றி விடுவிக்கப்படும் இந்திய படகுகள்!


அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் புகுந்த வேளை கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களது படகுகளை அரசியல் பேரங்களின் அடிப்படையில் இலங்கை அரசு விடுவிப்பதாக உள்ளுர் மீனவ அமைப்புக்கள் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளன.விடுவிக்கப்படுகின்ற இந்திய படகுகள் மீண்டும் இலங்கை கடற்பரப்பினுள் தொழில்நடவடிக்கைக்கு வருகை தரமாட்டாதென்ற உறுதி மொழி வழங்கப்படவேண்டுமென உள்ளுர் மீனவ அமைப்புக்கள் வலியுறுத்திவருகின்றன.இந்நிலையில் அவ்வாறான உறுதி மொழிகள் பெறப்படாது டெல்லியுடன் இரகசியமாக பேசிக்கொண்டு இலங்கை அரசு படகுகளை விடுவிப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கைக்கடற்படையினரின் கட்டுப்பாட்டில் காரைநகர் கடற்படை தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளில் 10 படகுகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்த கடிதம் ஒன்று இலங்கை அரசாங்கத்தினால் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட நிலையில், 200க்கும் மேற்பட்ட படகுகள் தடுத்து வைக்கப்பட்டன. 

அவற்றுள் கடந்த வருடம் 42 படகுகள் விடுவிக்கப்பட்டிருந்தன. இதனிடையே, எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி, டெல்லியில் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது, படகுகள் விடுவிப்பு மற்றும் மீனவர்களின் அத்துமீறல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments