சம்பந்தனிடம் திறப்பு இருக்கிறதாம்!


தமிழ் அரசியல் கைதிகள் பலர் சிறைச்சாலைகளில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த விடயத்தை அவமதிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், ஏனைய தமிழ்க் கட்சிகளும் தமது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டுமென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லையென்ற வகையில் கருத்து வெளியிடடிருந்தார்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ள  அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளதோடு, அதன் பிரதி ஒன்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம்  கையளிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 'ஜனாதிபதியின் இந்த கருத்தின் (செவ்வியில் குறிப்பிட்டது) மூலம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாதிகள் என்ற கருத்தியலை முன்வைக்க முனைந்துள்ளதாக எண்ணத் தோன்றுகிறது.
மேலும், வடக்கு கிழக்கில் பாதுகாப்புப் படைகளால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி விடயம், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விடயம், ஆகியவற்றிலும் ஜனாதிபதியின் கருத்துக்கள் தமிழ் மக்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன.
யுத்தம் முடிந்து 9 வருடங்கள் கடந்துள்ள போதிலும் 108 அரசியல் கைதிகள் இன்னமும் தொடர்ந்து சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 50க்கும் மேற்பட்டோரின் வழக்கு விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன.  45 பேர் 10 வருடங்களுக்கு மேல் சிறைகளில் வாடுகின்றனர். 12 பேர் தொடர்பில் இதுவரை குற்றப்பத்திரிகையேனும் தாக்கல் செய்யப்படவில்லை.
இவ்வாறான நிலையில் இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லையென ஜனாதிபதி தெரிவித்திருப்பதானது அவருடைய அரசியல் தெளிவற்ற தன்மைமையயே எடுத்துக்காட்டுகிறது என்பதை விட கடந்த கால வரலாறு முழுவதும் சிங்கள வாக்குகளை நம்பி அதனை பாதுகாத்துக்கொள்ளும் அரசியல் சதி போராட்டத்தின் நீட்சி எனக் குறிப்பிடலாம்.
இவ்வாறான சூழலில் ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தி தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அறிக்கையின் பிரதியைப் பெற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தம்மை சந்திக்கின்ற சந்தர்ப்பங்களில் அரசியல் இருக்கின்றார்கள் என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் காரணங்களுக்காக சில சந்தர்ப்பங்களில் அரசியல் கைதிகள் எவரும் இல்லையென்ற வகையில் கருத்துக்களை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனை உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு இந்த விடயம் தொடர்பில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்புடன் கலந்துரையாடுவதற்கு தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

No comments