டாண் அநியாயம்:அப்பாவிகள் பலி!


வடமராட்சி கரணவாய் பகுதியில் மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் மகன் என இருவர் பரிதாபகரமாக உயிரிழக்க முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் டாண் தொலைக்காட்சியே காரணமென்பது அம்பலமாகியுள்ளது. 

மின்விபத்தில் ஜெகநாதன்( வயது 64) மற்றும் அவரது மூத்த மகனான சஞ்சீவன்(29வயது) ஆகியோரே அகால மரணமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் இன்று காலை மழை பெய்ந்திருந்த நிலையில் தனது ஆடுகளிற்கு உணவிற்காக மரங்களில் குழை வெட்ட ஜெகநாதன் முற்பட்டுள்ளார்.

அப்பகுதியில் துண்டிக்கப்பட்ட டாண் தொலைக்காட்சியின் கேபிள் இணைப்பொன்று வீசப்பட்டிருந்தது.யாழ்.குடாநாடெங்கும் முறையற்ற விதத்தில்  மின்கம்பங்கள் வழியேயே டாண தொலைக்காட்சி இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.இதற்கு இலங்கை மின்சாரசபை எதிர்ப்பினை தெரிவித்து வந்த போதும் கோத்தபாயவின் தலையீட்டையடுத்து முறையற்ற இணைப்பை அது கண்டுகொண்டிருக்கவில்லை.

இந்நிலையில் பொதுமக்களிற்கு வீடுகள் தோறும் மின்கம்பங்களை பயன்படுத்தி கேபிள் மூலம் டாண் தொலைக்காட்சி இணைப்பினை வழங்கியுள்ளதுடன் அதற்கு மாதாந்த வாடகையினை அறவிடுவதும் வழமையாகும்.


இந்நிலையில் மாத வாடகை வழங்காவிடின் இணைப்பினை துண்டித்து விடுவது டாண் தொலைக்காட்சியின் நடைமுறையாகும்.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு அருகாகவுள்ள வீட்டினர் வாடகை செலுத்தவில்லையென இணைப்பை துண்டித்த டாண் தொலைக்காட்சி அதன் கேபிள்களை நிலத்தில் வீசியுள்ளது.குறித்த கேபிள் மழை காரணமாக மின் இணைப்புடன் தொடர்புபட்டிருந்த நிலையில் தமது வீட்டின் வேலியிருந்த அதனை தந்தையாரான ஜெகநாதன் கேபிளை  தூக்கி வீச முற்பட்டுள்ள நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.தந்தையாரை காப்பாற்ற மகன்கள் சென்றிருந்த நிலையில் அவர்களுள்; மின்சாரத்தால் தாக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுள்; ஒருவரான சஞ்சீவன்(29வயது)  சம்பவ இடத்திலேயே உயிரிழக்க மற்றையவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே காவல்துறையுடன் அவசர அவசரமாக டாண் தொலைக்காட்சி நிர்வாகம் நடத்திய இரகசிய பேரத்தையடுத்து குறித்த கேபிள் பற்றியோ அதனை அநாதரவாக கைவிட்டவர்கள் பற்றியோ சத்தம் சந்தடியின்றி காவல்துறை விடயத்தை இழுத்து மூடி விட்டதாக தெரியவருகின்றது.

உயிரிழந்தவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்களென அதன் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ள நிலையினில் இப்பரிதாப மரணங்கள் தொடர்பில் விசாரணைகளிற்கு அக்கட்சி கோருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments