வங்கிக்கு எதிராக பொங்கியெழும் மக்கள்!


முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கெடுத்த ஏற்றிய ஹற்றன் நஸனல் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள விவகாரம் தமிழ் மக்களிடையே கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

கிளிநொச்சியிலுள்ள ஹற்றன் நஸனல் வங்கியில், கடந்த 18ஆம் திகதி அதிகாரிகளும், ஊழியர்களும் ஒன்று சேர்ந்து நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்த நினைவேந்தல் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியதை அடுத்து , கொழும்பிலுள்ள குறித்த தனியார் வங்கியின் தலைமை அலுவலக உயர் அதிகாரிகள், கிளிநொச்சி வங்கியின் உதவி முகாமையாளரை விசாரணைக்கு உட்படுத்தினர்.

இறுதி யுத்தத்தில் தம் உயிர்களை அர்ப்பணித்த உறவினர்களை நினைவு கூருவது, அவர்களின் உரிமை என உதவி முகாமையாளர் தலைமை அலுவலக உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைத்துள்ளார்.

ஆனால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகளை நினைவு கூர்ந்து வங்கியில் நினைவுச் சுடர் ஏற்றியமை தேசத்திற்கு விரோதமானது என்று குறித்த வங்கியின் கொழும்புத்தலைமை வாதிட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, உடனடியாக அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த உதவி முகாமையாளர், மற்றும் ஊழியர் ஒருவரையும் பணியில் இருந்து இடை நிறுத்துவதாகவும் அறிவித்திருந்தது.

இவ்விவகாரம் தமிழ் மக்களிடையே கடும் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ளது.

இலங்கை அரசே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் தலையிடாத போக்கை கடைப்பிடித்துள்ள நிலையில் தனியார் வங்கி அதுவும் மக்களது பணத்தில் செயற்படும் வங்கி நிர்வாகத்தின் நடவடிக்கைகள் கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

இன்று காலை முதல் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துமுகமாக நூற்றுக்கணக்கான தமிழ் வாடிக்கையாளர்கள் தமது கணக்குகளை மூடியுள்ளனர்.அத்துடன் தலைமையலுவலகத்திற்கு தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக எதிர்ப்பை வெளிப்படுத்திவருகின்றனர்.

இதனால் வங்கி நிர்வாகம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. தமிழ் மக்களிடையே கூடிய வாடிக்கையாளரை கொண்டுள்ள குறித்த வங்கியின் நிர்வாகத்தின் இனவாத செயற்பாடு மக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளதனை கருத்துக்கள் வெளிப்படுத்தி வருகின்றது.

No comments