யாழில் மீண்டும் உயிர்பெறும் வன்முறை கும்பல்கள்?


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் அண்மித்து வருகின்ற நிலையில் யாழ்.குடாநாட்டில் மீண்டும் குழச்சண்டைகளை ஊக்குவிப்பதில் படைதரப்பும் காவல்துறையும் மும்முரம் காண்பித்துவருகின்றன.அவ்வகையில் மீண்டும் ஆவா குழுவை களமிறக்க அவை முற்பட்டுள்ளன.

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் ஆலயத்துள் இருந்த இருவர் மீது நேற்று திங்கட்கிழமை இரவு வாள்வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறை அறிவித்துள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே காவல்துறையால் தேடப்பட்டுவரும் ஆவா குழுவின் முக்கியஸ்தர் வினோத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே இதேபோன்றே இரு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாட்டால், தெல்லிப்பழை எட்டாம் கட்டைப் பகுதியில் ,வாள்கள், இரும்புக் கம்பிகள் என்பவற்றுடன் சுமார் 20 பேர் , 10 மோட்டார் சைக்கிள்களில் நேற்று இரவிரவாக அந்தப் பகுதியில் நடமாடியதால் பொதுமக்களிடையே பெரும் அச்சநிலை தோன்றியிருந்தது.

இந்த கும்பல்களின் அடாவடிகளைக் கட்டுப்படுத்த காவல்துறை தவறிவிட்டதாக மக்கள் குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துள்ளனர்.
மாற்றுக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை, இன்னொரு கும்பல் வெட்டுவதற்கு துரத்தியதாகவும், அவர் தப்பியோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்ததால் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகின்றது.

பின்னர் இரு தரப்பினரையும் தெல்லிப்பழை காவல்துறை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர் என்றும், அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் விசனமடைந்துள்ளனர்.

வாள்வெட்டுக்கும்பலில் பிரதான சூத்திரதாரி கைக்குண்டு ஒன்றை வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரியவருகின்றது.

No comments