அரசியல் கைதிகள் விவகாரம்: கள்ள மௌனத்தில் அரசு!


இலங்கை சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில்  இல்லையென இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் சர்வதேச மட்டத்தில் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றது.
2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்முன், நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்போம் என கூறிய இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் எனவும் உறுதியளித்திருந்தனர்.
அண்மையில் தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள கூட்டமைப்பிடம் ஆதரவு கோரி பெற்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் கைதிகளது விடுதலைக்கு சம்மதித்துமிருந்தார்.

முன்னதாக தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்து உறுதிமொழி வழங்கினார். சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு போர்க்கால கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவர் எனவும் கூறியிருந்தார்.

ஆனால் இன்று, மூன்று ஆண்டுகள் சென்று விட்ட பின்னரும் நல்லாட்சி அரசாங்கம் என தன்னைத்தானே கூறிக்கொள்ளும் இந்த இலங்கை அரசாங்கம், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் போன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது என அரசியல் கைதிகளது குடும்பங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனிடையே இலங்கை அரசாங்கம் சிங்கள சமூகத்திற்கு ஒரு நீதியையும் தமிழ் சமூகத்திற்கு வேறொரு நீதியையும் முன்னிலைப்படுத்தி நிர்வகித்து வருகின்றது. தமிழ் அரசியல் கைதிகள் என்று சிறையில் எவரும் இல்லை என இலங்கை அரசாங்கத் தரப்பு பகிரங்கமாக கூறியதில் மர்மம் இருப்பதாக அரசியல் கைதிகளது விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் வணபிதா சக்திவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லையென இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனரட்ன செய்தியாளர் மாநாடு ஒன்றில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments