பதவிச்சண்டை:அங்கயனிற்கு பதவி வேண்டாம்: கூட்டமைப்பு!

இலங்கை நாடாளுமன்றத்தின், பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர், அங்கஜன் ராமநாதன் நியமிக்கப்படவுள்ளார். கட்சியின் தலைவர் என்ற முறையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கஜன் ராமநாதனின் பெயரை பரிந்துரைத்துள்ளார். இது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக அமை்ச்சர் ராஜித சேனரட்ன தெரிவித்துள்ளார். ஆனாலும் ஜனாதிபதியின் இந்த பரிந்துரை இறுதியான முடிவு அல்ல எனவும் அமைச்சர் கூறியுள்ளார். 

அதேவேளை, பிரதி சபாநாயகராக அவரை நியமிப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பிரதி சபாநாயகராக அங்கஜன் ராமநாதனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு எதிர்ப்பு வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகி, எதிர்த்தரப்பு ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.
அந்த வெற்றிடத்துக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் பெயரை இலங்கை ஜனாதிபதி ஒருதலைப் பட்சமாக பரிந்துரைத்துள்ளதாக, மஹிந்த ராஜபகசவை மையமாகக் கொண்ட கூட்டு எதிர்க்கட்சியும் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த பரிந்துரையை, ஐக்கியதேசியக் கட்சியும் விரும்பவில்லையென கொழும்பில் உள்ள சுயாதீன செய்தியாளர்கள் கூர்மை செய்தித் தளத்துக்கு தெரிவித்துள்ளனர்.
அதேவேளை நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கடந்த மூன்று வருடங்களாக பதவி வகிக்கின்றமை குறி்ப்பிடத்தக்கது.

No comments